இந்திய அளவில் #PerfectCitizenThalaAJITH என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான நேரமும் அண்மையில் மதியம் 1 மணி வரை எனக் குறைக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவால் அன்றாடம் வேலை செய்து பிழைப்பு நடத்தும் ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக சினிமாவில் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த முழு முடக்கத்தால் சினிமாவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான பெப்சி ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே இவர்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் உதவ முன் வர வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி திரைப்பட நட்சத்திரங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை ஏற்று நடிகர் ரஜினி 50 லட்சம் வழங்கினார். விஜய் சேதுபதி 10 லட்சம் வழங்கினார். இவர்களைத் தொடர்ந்து நயன்தாரா 20 லட்சத்தை வழங்கினார். அதேபோல் கமல்ஹாசன், சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, உதயநிதி, தனுஷ், சிவகார்த்திகேயன், நடிகை குஷ்பு, 'மாஸ்டர்' தயாரிப்பாளர் லலித் குமார், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தத் திட்டத்தில் பங்களிப்பு செய்தனர்.
இதனிடையே இன்று நடிகர் அஜித்குமார், கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் என தனித்தனியாக நிதியுதவி அளித்துள்ளார். மேலும் பெப்சி தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ரூ. 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். அதனையடுத்து அவரது ரசிகர்கள் அவரது கொடை உள்ளத்தைப் பாராட்டி ட்விட்டரில் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அஜித் குறித்து பர்ஃபெக்ட் ஆன சிட்டிசன் தல அஜித் என்ற ( #PerfectCitizenThalaAJITH) ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி உள்ளது.