சினிமா

"ஒவ்வொரு நாளும் சினிமாவில் நிறைய கற்கிறேன்!'' - ’ஜகமே தந்திரம்’ ஐஸ்வர்யா லட்சுமி

"ஒவ்வொரு நாளும் சினிமாவில் நிறைய கற்கிறேன்!'' - ’ஜகமே தந்திரம்’ ஐஸ்வர்யா லட்சுமி

PT WEB

'ஒவ்வொரு நாளும் சினிமாவை பற்றி கற்றுக்கொண்டு வருகிறேன்' என 'ஜகமே தந்திரம்' படத்தில் 'அட்டிலா' என்ற ஈழத் தமிழ்ப் பெண் கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான விஷாலின் 'ஆக்‌ஷன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான தனுஷின் 'ஜகமே தந்திரம்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஈழத் தமிழராக அட்டிலா கதாபாத்திரத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி புலம்பெயர்ந்த அகதியாக உருக்கமான நடிப்பில் கவனம் செலுத்தியிருந்தார்.

இந்தப் படத்துக்கு பின் தற்போது, மணிரத்னத்தின் கனவுப் படமான 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார். முதன்மைக் கதாபாத்திரமான பூங்குழலியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

தமிழில் முன்னணி நடிகை இடத்தை நோக்கி நகர்ந்து வந்தாலும், இவரின் அறிமுகம் மலையாள சினிமாவான 'எங்களுடே நாட்டில் ஓர் இடவேளா' படத்தில். நான்கு ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்தாலும், 'சினிமாவில் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்' என்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி. ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ''ஒரு நடிகராக ஒவ்வொரு நாளும் சினிமாவைப் பற்றி அறிய, சினிமாவில் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முயன்று வருகிறேன். எனினும், சீக்கிரமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

லாக்டவுன் காரணமாக, படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிந்தபோது பல வித்தியாசமான திரைப்படங்களைப் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த நாட்களில் நான் பார்த்த படங்கள் எனக்கு நிறைய ஊக்கம் கொடுத்தன. இதனால் பல கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனவேதான், இன்னும் சினிமாவை பற்றிய கற்றல் எனக்கு தேவை என நினைக்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

இதற்கிடையே, மலையாளம், தமிழைத் தாண்டி தற்போது தெலுங்கிலும் கமிட் ஆகியிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. 'கோட்சே' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.