சினிமா

'சூரரை போற்று உருவான பின்னணி.. ஜி.ஆர்.கோபிநாத்தின் சுவாரஸ்ய பகிர்வு..

'சூரரை போற்று உருவான பின்னணி.. ஜி.ஆர்.கோபிநாத்தின் சுவாரஸ்ய பகிர்வு..

JustinDurai

யாரிடம் கேட்டாலும் சூர்யாவைப் பற்றி உயர்வாகவே பேசினார்கள் என்று மனம் திறந்துள்ளார் 'ஏர் டெக்கான்'  நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்.

நடிகர் சூர்யா, இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள 'சூரரை போற்று ' திரைப்படம்,  அமேசான் தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகிறது.  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவுள்ள இந்த படம் 'ஏர் டெக்கான்' விமான நிறுவனத்தின் நிறுவனரான கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட “சிம்பிள் ஃப்ளை” நூலின் கற்பனையான பதிப்பாகும். 

இந்நிலையில் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் சமீபத்தில் நியூஸ் மினிட்க்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், ‘’நான் 'சிம்பிள் ஃப்ளை' என்ற புத்தகத்தை எழுதினேன். அந்நூல் அமோகமாக விற்பனையானது. அதன் துவக்கத்தில்கூட, நடிகர் சுஹாசினி மற்றும் திரைக்கதை எழுத்தாளர் கிரிஷ் கர்னாட் இருவரும் என்னிடம் 'சிம்பிள் ஃப்ளை'  நூலை ஒரு திரைப்படமாக உருவாக்கும்படி சொன்னார்கள் அல்லது படத்தை தயாரிப்பதற்கான அனுமதி வேண்டும் என்று கோரினார்கள்.

நிச்சயம் இந்த நூலை படமாக்கினால் நல்ல வெற்றி பெறும் என்றார்கள். துரதிர்ஷ்டவசமாக கிரிஷ் கடந்த ஆண்டு காலமானார்.

அதன்பின்னர் திரைப்பட தயாரிப்பாளர் குணீத் மோங்கா என்னை தொடர்பு கொண்டார். அவர் ஒரு எளிமையான பின்னணியைச் சேர்ந்தவர். அவரையும் அவருடைய தயாரிப்பு நிறுவனமான சீக்கியா என்டர்டெயின்மென்ட் தயாரித்த படங்களையும் நன்கறிவேன். கேங்க்ஸ் ஆஃப் வாஸ்ஸெய்பூர், தி லஞ்ச்பாக்ஸ், மசான் போன்ற சில நல்ல திரைப்படங்களைத் தயாரித்துள்ளது.

குணீத் மோங்கா என்னை அணுகி, 'சிம்பிள் ஃப்ளை'  நூலை படமாக தயாரிக்க விரும்புவதாகவும், அதற்கான உரிமைகளை விரும்புவதாகவும் கூறினார் இந்தி உட்பட அனைத்து மொழிகளிலும். முதலில் தமிழிலும், பின்னர் இந்தி மொழியிலும் இதை உருவாக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். இந்த படத்திற்கு இயக்குநராக சுதா கொங்கராவைத் தேர்ந்தெடுத்தது அவர்தான்.

ஸ்கிரிப்டிங் போது நான் கலந்து கொள்ளவில்லை. புத்தகத்தைப் பற்றியும் புத்தகத்தில் இல்லாத சில விஷயங்களைப் பற்றியும் மேலும் புரிந்துகொள்ள சுதா உள்ளிட்ட படக்குழுவினர் என்னுடன் பேச நிறைய நேரம் செலவிட்டார்கள்.

புத்தகத்தை அப்படியே படமாக உருவாக்கவில்லை. இந்நூலின் கற்பனை பதிப்பு தான் ‘சூரரை போற்று’. படத்தின் கதையில் எங்குமே நான் தலையிடவில்லை. நான் குறிப்பிட்ட ஒரே விஷயம் என்னவென்றால், திரைப்படம் ஒரு ஒழுக்கமான முறையில் செய்யப்பட வேண்டும், எந்த நெறிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் மீறக்கூடாது. படம் புத்தகத்தின் தன்மைக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்’’ என்றார்.

சூர்யா நடிப்பது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு கோபிநாத் பதிலளிக்கையில், ''எனக்கு தமிழ் படங்கள் பற்றி அதிகம் தெரியாது. சூர்யா மிகவும் நல்ல மனிதர் என்றும் தமிழ்நாட்டில் ஒரு பெரிய நட்சத்திரம் என்றும் நிறைய பேர் என்னிடம் சொன்னார்கள். ஆனால் நான் அவரது எந்தப் படத்தையும் பார்த்ததில்லை. எனினும் நான் யாரிடம் கேட்டாலும் சூர்யாவைப் பற்றி உயர்வாகவே பேசினார்கள்’’ என்றார்.

courtesy - the news minute