தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனியின் புதிய படம் மகத்தான வெற்றிப் படமாக பதிவாகியிருக்கிறது.
நாகர்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி. சில வருடங்கள் முன் தனது குடும்ப உறுப்பினர்களைப் பின்பற்றி திரைத்துறையில் அடியெடுத்து வைத்தவர் இதுவரை மூன்று படங்களில் நடித்துள்ளார். `அகில்', `ஹலோ', `மிஸ்டர் மஞ்சு' என இதுவரை மூன்று படங்களில் சோலோ ஹீரோவாக நடித்துவிட்டார். என்றாலும் இந்த மூன்று படங்களும் அகிலுக்கு தோல்வியாக அமைந்தன.
இந்தநிலையில்தான் தற்போது தசரா திருவிழா அகிலின் 4-வது படமான `மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்' (Most Eligible Bachelor) திரைக்கு வந்தது. பொம்மரில்லு பாஸ்கர் என்பவர் இயக்கிய இந்தப் படத்தில் அகிலுக்கு ஜோடியாக, பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.
தனது முதல் மூன்று படங்களும் மிகப்பெரிய தோல்வியை கண்டதால் இந்தப் படம் மூலம் வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த அகிலுக்கு, எதிர்பார்த்தது நடந்துள்ளது. தசரா விழாவை முன்னிட்டு அக்டோபர் 15 அன்று மூன்று படங்கள் தெலுங்கில் வெளியாகின. ஷர்வானந்தின் ‘மகா சமுத்திரம்’, அகில் அக்கினேனி, பூஜா ஹெக்டேவின் `மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்' மற்றும் `பெல்லி சந்தட்' என்ற படமும் வெளிவந்தன. இந்த மூன்று படங்களில் அக்கிலின் படமே வெற்றியைப் பெற்றுள்ளது.
`மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்' இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற, முதல்கட்ட வசூலே ரூ.18 கோடி அளவில் கிடைத்துள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மற்றும் அமெரிக்க வெளியீடுகளில் அக்கிலின் `மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்' நல்ல வசூலை ஈட்டிவருகிறது என்றும் படக்குழு தகவல் சொல்லியுள்ளது. சுவாரஸ்யமாக, அமெரிக்காவில் மட்டும் ரூ.3 கோடிக்கும் அதிகமான வசூலை படம் பெற்றுள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக இவ்வளவு பெரிய வசூல் சாத்தியப்பட்டுள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வசூலில் தயாரிப்பாளர்களின் பங்கு மட்டும் ரூ.10 கோடி வரை கிடைத்துள்ளதால் படக்குழு மிகவும் சந்தோஷமடைந்துள்ளது. இதனிடையே, இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால், அகில் அக்கினேனி இறுதியாக பாக்ஸ் ஆபிஸில் முதல் வெற்றியைப் பெற்றுள்ளார் என்பது தெளிவாகிறது. இதனிடையே, சில வாரங்கள் முன் அகிலின் சகோதரர் நாக சைதன்யா - சாய் பல்லவி நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியான 'லவ் ஸ்டோரி' இதேபோன்ற ஒரு வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.