சினிமா

`Pregnancy-ன்றது சாய்ஸ் தானே?’- முக்கியமான பிரச்னையை அழுத்தமாக பேசும்`அடடே சுந்தரா’

`Pregnancy-ன்றது சாய்ஸ் தானே?’- முக்கியமான பிரச்னையை அழுத்தமாக பேசும்`அடடே சுந்தரா’

நிவேதா ஜெகராஜா

திரையரங்குகளில் ஜூன் 10 அன்றும், ஜூலை 10-ம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகியிருக்கிறது நானி - நஸ்ரியாவின் நடிப்பில் உருவான `அடடே சுந்தரா’ திரைப்படம். தெலுங்கு, தமிழ், மலையாளம் என மும்மொழிகளில் வெளியான இப்படம், 2020-களிலும் நிகழும் சாதி - மத பாகுபாடுகளையும், கூடவே பாலின பாகுபாடுகளையும், தனி மனித சுதந்திரத்தின் மீதான அத்துமீறல்களையும் காதல் என்ற ஒற்றை புள்ளியை வைத்து அழுத்தமாக பேசியிருக்கிறது.

இக்காரணங்களால் இப்படம் அதிகம் பேசப்பட வேண்டிய ஒன்றாக தற்போது உருவாகியிருக்கிறது. 

விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி, நஸ்ரியா நடித்திருக்கும் படம்தான் 'அடடே சுந்தரா'. இவர்களுடன் நடிகைகள் ரோகினி, நதியா, அனுபமா பரமேஷ்வரன் நடிகர்கள் நரேஷ், அழகம்பெருமாள், ஹர்ஷ வர்தன் என பலர் நடித்திருக்கின்றனர். நான் - லீனியர் பாணியில் படம் செல்கின்றது. 2 மணி நேரம் 56 நிமிடங்களுக்கு ஓடும் இப்படம், சற்றே நீளமான திரைக்கதை வடிவமைப்பால் கைகளை அடிக்கடி ஃபார்வேர்டு பட்டனை தேட வைக்கக்கூடும். நான் - லீனியர் மேக்கிங்கிலும், முதல் முறை படம் பார்ப்பவர்களுக்கு ஒரு சில இடங்களில் புரிதலின்மை அல்லது குழப்பம் ஏற்படலாம். அதனால் பொறுமையுடனேயே படத்தை பார்க்க வேண்டியுள்ளது. படத்தின் முதல் பாதியில், வெகு நேரத்துக்கு வரும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள், படம் எதை நோக்கி செல்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. கிட்டத்தட்ட இண்டர்மிஷனுக்குப் பின்னரே தான் பேச வந்த விஷயத்தை பேசத் தொடங்குகிறார் இயக்குநர்.  முதல் பாதியை நடிகர்கள் எல்லோரும்தான் தங்கள் தோள்களில் மொத்தமாக தூக்கி சுமந்துக்கொண்டு சென்றுள்ளனர். நானி, நஸ்ரியா, நானியின் மேனேஜராக வரும் ஹர்ஷ வர்தன், அப்பாவாக வரும் நரேஷ், அம்மாவாக வரும் ரோகினி ஆகியோர் அதிகம் சுமக்கின்றனர்ஆனால் இவற்றையெல்லாம் மீறி படத்தில் ரசிக்க, பாராட்ட விஷயங்கள் இருக்கின்றன.

கடல் தாண்டி பயணப்பட்டால், அதனால் வரும் தோஷத்தை கழிக்க நாக்கில் சூடு போட்டுக்கொள்ள வேண்டும் எனும் அளவுக்கு`பிராமனர்’-ஆக வளர்க்கப்படும் ஹீரோ சுந்தர் (நானி), வேற்று மதத்தினரின் வீட்டிலிருந்து தீபாவளி ஸ்வீட் வந்தால்கூட வேண்டாமென்று கொட்டிவிடும் அளவுக்கு`கிறிஸ்துவ’ பெண்ணாக வளர்க்கப்படும் ஹீரோயின் லீலா (நஸ்ரியா) ஆகியோரின் தான் படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள். இவர்கள் இருவருக்கும் என்ன தொடர்பு, எப்படி காதல் மலர்ந்தது, இந்த இரு வீட்டினரையும் சம்மதிக்க வைக்க இருவரும் என்னென்ன முயற்சிகள் எடுத்தார்கள், அதில் வரும் சொதப்பல்கள் - சமாதானங்கள் ஆகியவைதான் படத்தின் மையக்கதை. இவற்றை உணர்வுபூர்வமாக பேசியுள்ளார் இயக்குநர் விவேக் ஆத்ரேயா.

பெண்ணுக்கு குழந்தை பெறுவதில் சிக்கல் இருந்தால் அதை ஒருமாதிரியும் - அதுவே ஆணுக்கு இருந்தால் வேறு மாதிரியும் பார்ப்போம்/பேசுவோம்/எடுத்துக்கொள்வோம்; பெண்ணின் குறைகள் பூதாகாரமக்கப்படும்; பெண் என்றால் குழந்தை பெற்றே ஆகவேண்டும்... இல்லையென்றால் மதிப்பில்லை - போன்ற சமூக கட்டமைப்புகளை படம் அழுத்தமாக கேள்வி கேட்கிறது. இறுதியில் அதற்கான விடையையும் உணர்ச்சித்தளும்ப தருகிறது.

`குழந்தை இல்லனா இங்க எனக்கு மதிப்பில்ல தானே’ என்று படத்தில் பெண்ணொருவர் பேசும் காட்சியொன்று வரும். திருமணமான அவருக்கு, அதற்கு முன் அப்பெண்ணுக்கு எதிர்பாராமல் கரு கலைந்திருக்கும். எதிர்பாராமல் ஏற்படும் கருக்கலைப்பு தந்த மன - உடல் அழுத்தத்திலிருந்து மீள கூட இங்கு பெண்களுக்கு போதிய காலம் இடைவெளி தரப்படுவதில்லை என்பதையும்; கருக்கலைப்புக்கு உள்ளாகும் பெரும்பாலான பெண்களுக்கு அவர்களின் கணவர்களே துணை நின்று ஆறுதல் சொல்வதில்லை என்றும் அப்பெண் கதாபாத்திரம் வழியாக அழுத்தமாக பேசுகிறது.

சமீபத்தில் அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை ஏற்பட்ட போது, `இந்தியாவிலெல்லாம் கருக்கலைப்புக்கான சட்டம் இயற்றப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிவிட்டது தெரியுமா?’ என பெருமைப் பட்டுக்கொண்டவர்கள் நாம் தாம். உண்மையில், திருமணமான - எதிர்பாராமல் கருக்கலையும் பெண்ணுக்கு கூட நம் குடும்பங்கள் பெரியளவில் சப்போர்டிவாக இருப்பதில்லை. பல வீடுகளில் இன்றளவும், இப்படியான சூழலில் சம்பந்தப்பட்ட பெண்ணின் அஜாக்கிரதையே கருக்கலைப்புக்கான காரணமாகவும் சொல்லப்படுகிறது!

திருமணமான - திட்டமிடப்பட்ட கர்ப்பம், எதிர்பாராமல் ஒரு பெண்ணுக்கு கலையும் சூழலில்கூட அப்பெண்ணையே நாம் குற்றவாளி ஆக்குகிறோம் எனில், திருமணம் செய்யாத - திட்டமிடாத கர்ப்பத்துக்கு உள்ளான - சுய விருப்பத்தின் பேரில் கருக்கலைக்க விரும்பும் ஒரு பெண்ணின் நிலைதான் இந்தியாவில் என்ன? இதையே படமும் பேசுகிறது. படத்தின் இறுதியில், `ப்ரெக்னென்சிங்கறது கம்பல்ஷன் இல்லையே; சாய்ஸ் தானே’ என்று நானி உணர்ச்சிப்பொங்க பேசுவது, எல்லாத்துக்கும் டாப்! வசனகர்த்தாவுக்கு, அதற்காகவே கூடுதல் அப்ளாஸ்!

இதைத்தாண்டி மதம் சார்ந்த பிரச்னைகளையும் படம் பேசுகிறது. மதமும் சாதியும் எப்படி ஒரு குழந்தையின் சிறகுகளை பறக்கவிடாமல் செய்கிறது என்பதை நானி கதாபாத்திரத்தின் மொத்த கதாபாத்திர வடிவமைப்பு வழியாக நகைச்சுவை கலந்து பேசியுள்ளார் இயக்குநர்.

சுந்தரும் (நானி), லீலாவும் (நஸ்ரியா) தங்கள் காதலுக்காக வீட்டில் தலா ஒவ்வொரு பொய் சொல்கிறார்கள். அந்தப் பொய், சமூகம் ஆணுக்கும் - பெண்ணுக்கும் கட்டமைத்து வைத்திருக்கும் எல்லா ஒழுக்க நெறிகளையும் கேள்விப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. சமூகத்தின் நெறிமுறைகளை குடும்பத்தில் ஒருவர் உடைத்தெறிந்துவிட்டு - நெறிமுறைக்கு அப்பாற்பட்டு வாழ நினைக்கும்போது, அக்குடும்பங்கள் தங்களின் ஆண்டாடுகால சாதி - மத - பாலின பாகுபாடுகளை எல்லாம் எவ்வளவு விரைந்து ஓரம்கட்டி வைத்துவிட்டு, `குடும்ப மானம் மரியாதையை’ காப்பாற்ற எவ்வளவு தீவிரமாக முயல்கிறது என்பதையும் படம் அப்பட்டமாக காட்டியிருக்கிறது.

இத்தனை கருத்துகளையும் நகைச்சுவை கலந்து இயக்குநர் சொல்லியிருக்கிறார் என்பதே படத்தின் மிகப்பெரிய வெற்றி. மிக மிக சென்சிட்டிவான கதையில், எந்த இடத்திலும் யாரையும் புண்படுத்தாமல் கதை பேசியுள்ளார் இயக்குநர். கொஞ்சம் நீளத்தைக் குறைந்த்திருந்தால், படம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். நானியும் நஸ்ரியாவும், படத்தின் பிற மூத்த நடிகர்களும் படத்தின் தேவையறிந்து நம்மை படத்துக்குள் கைபிடித்து கூட்டிசெல்வது படத்தின் பலம்.

படத்தின் ஒளிப்பதிவு, நமக்கு ஃபீல்-குட் உணர்வை கொடுக்கிறது. `அமீலியா தீவு’ பற்றிய சில காட்சிகளில், போகிற போக்கில் நம்மையும் இறுதியில் அமீலியா தீவுக்கு அழைத்துச் சென்றிருப்பது கூடுதல் சுவாரஸ்யம்!

படம் இப்போது நெட்ஃப்ளிக்ஸில் இருக்கிறது. பார்க்காதவர்கள், கட்டாயம் பாருங்கள்.