நடிகைகள் பற்றி இழிவாகப் பேசிய டிவி தொகுப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கு சேனல் ஒன்றில் தொகுப்பாளராக இருப்பவர், சம்ப சிவ ராவ். இவர் கடந்த சனிக்கிழமை, சேனல் ஒன்றில் நடந்த சினிமா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதில் தெலுங்கு திரைத்துறையினர் பலர் கலந்துகொண்டனர். அப்போது நடி கைகள் பற்றிக் குறிப்பிடும்போது தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தினாராம். இது தெலுங்கு நடிகைகள் சிலருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நடிகைகள் சிலர் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தொகுப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி நடிகை ரகுல் பிரீத் சிங் கூறும்போது, ’அந்த நபர் தன்னை ஒரு செய்தியாளர் என்று சொல்ல வெட்கப்பட வேண்டும். நடிகைகளை இழிவான சொற்களாலா வகைப்படுத்துவது? இது போன்ற விவாதங்களால் என்ன செய்துவிட போகிறோம்? இது கேவலமான செயல்’ என்று கூறியுள்ளார்.
நடிகை லாவண்யா திரிபாதி கூறும்போது, ‘சமீப காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. இது வெட்கக் கேடானது, அறுவறுப்பானது. சிலர் பெண்களை அவமானப்படுத்த பல்வேறு வழிகளை கண்டுபிடிக்கிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
நடிகை லட்சுமி மஞ்சு, ‘ பெண்களை யாரும் இப்படி தரக்குறைவான வார்த்தைகளால் பேசமாட்டார்கள். நடிகைகள் என்றால் சகித்துக் கொள்வார்கள் என்று இப்படி செய்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. இதை எளிதாக விட்டுவிட முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.