‘மாஸ்டர் செஃப்’ தயாரிப்பாளர் மீது நடிகை தமன்னா வழக்கு தொடர திட்டமிட்டிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் சூப்பர் ஹிட் அடித்த ரியாலிட்டி ஷோவான ‘மாஸ்டர் செஃப்’ சமையல் நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழில் விஜய் சேதுபதி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தெலுங்கில் தமன்னா நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் ஒளிபரப்பானது. தெலுங்கில் ஜெமினி டிவியில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியில் கவனம் ஈர்க்கும் காஸ்டியூம்களில் தமன்னா 20 எபிசோடுகளை தொகுத்து வழங்கினார்.
இந்த நிலையில், தமன்னா திடீரென நீக்கப்பட்டு தெலுங்கு நடிகை அனுசியா பரத்வாஜ் நிகழ்ச்சி தொகுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நடிகை அனுசியா டிவி சீரியல்கள் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் உறுதுணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ’மாஸ்டர் செஃப்’ தயாரிப்பு நிறுவனம் எந்த காரணத்தையும் கூறாமல் தன்னை திடீரென நீக்கப்பட்டதை அறிந்த தமன்னா வழக்கு தொடரவிருக்கிறார்.
தமன்னா சார்பில் அவரது வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கையில், “மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்காக தமன்னாவின் சம்பளப் பாக்கியை செலுத்தாததாலும், இன்னோவேட்டிவ் ஃபிலிம் அகடாமியின் தொழில்ரீதியற்ற நடத்தையாலும் தமன்னா சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளார். மீதி சம்பளம் கொடுக்காதது மற்றும் தொழில் தொழில்ரீதியாக இல்லாத அணுகுமுறையால் இந்த முடிவை எடுத்துள்ளார்.
முழு நிகழ்ச்சியையும் முடித்துக்கொடுக்கத்தான் தமன்னா தயாராக இருந்தார். ஆனால், தயாரிப்பு நிறுவனம் தமன்னாவுடனான தொடர்பை ஒரே இரவில் நிறுத்தியதால், இப்போது நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.