‘சுப்ரமணியபுரம்’ படத்தில் சுவாதி நடித்த கேரக்டரில் நடிக்க முடியாமல் போனதற்காக இப்போதும் வருந்துகிறேன் என்று நடிகை சந்தியா மனம் திறந்துள்ளார்.
‘காதல்' படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகை சந்தியா. அதைத் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்.
திருமணத்திற்கு பிறகு திரைத்துறையில் இருந்து விலகியிருந்த சந்தியா, தற்போது தனியார் தொலைக்காட்சியில் பூர்ணிமா பாக்யராஜ், சஞ்சீவ், உள்ளிட்டோர் நடிப்பில் ஒளிப்பரப்பாகி வரும் ‘கண்மணி' தொடரின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். சமீபத்தில் இவர் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ள காட்சிகள் இத்தொடரில் ஒளிப்பரப்பாகியது. சின்னத்திரை உலகில் கால்பதித்தது குறித்து மனம்திறக்கிறார் சந்தியா...
நான் மீண்டும் நடிக்க வருவதைப் பற்றி யோசிக்கவில்லை. ஆனால் நான் எப்போதும் நடிப்பை விரும்புகிறேன். நான் ஒருபோதும் திரைப்படங்களுக்குப் பின் சென்றதில்லை. ஆனால் நல்ல கேரக்டர்களை விடமாட்டேன்.
திருமணமான உடனேயே நான் ‘கன்சீவ்’ ஆகிவிட்டேன். அதனால் அடுத்தடுத்த வருடங்கள் பிசியாகவே நகர்ந்தன. என் மகள் ஷேமா உடன் இருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் நான் நேசித்தேன். இப்போது, அவளுக்கு நான்கு வயது. அதனால் சூட்டிங்கை தொடர எனக்கு ஒரு சுதந்திரம் கிடைத்துள்ளது.
நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான சுஜாதா மேடமும் நானும் பல ஆண்டுகளாக தொடர்பில் இருக்கிறோம். ‘கண்மணி’ தொடரில் ஒரு கெஸ்ட் ரோலில் வந்து நடிக்க என்னிடம் கேட்டார். எனக்கும் ஒரு ‘கம்பேக்’ கொடுக்க வேண்டும் என்ற ஒரு ஆர்வம் இருந்தது.
என் மகளுடன் அதிக நேரம் செலவிடுவதையே நான் விரும்புகிறேன். அதனால் ‘சீரியல்’ அதற்கொரு வசதியாக இருக்கும். அதற்காக மற்ற வாய்ப்புகளை நான் கதவடைத்துக் கொள்ளவில்லை.
சினிமாவில் எனது முதல் சுற்றில் அதிகம் சாதிக்க முடியவில்லை என்ற வருத்தம் இன்றளவும் உள்ளது. நான் எடுத்த சில தவறான முடிவுகள் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.
‘சுப்ரமணியபுரம்’ படத்தில் சுவாதி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போனதற்காக இப்போதும் வருந்துகிறேன். சசிகுமார் சார் தேடி வந்து கதையைச் சொன்னார். எனக்கும் பிடித்திருந்தது. எனினும் தயங்கினேன். வாய்ப்பை ஏற்க மறுத்ததால் சசிகுமார் சாருக்கு என் மீது கோபம், வருத்தம் இருந்திருக்கும். அவர் மனதைக் காயப்படுத்தி இருந்தால் அதற்காக மனதார மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.