விமான பயணத்தின்போது இண்டிகோ விமான ஊழியர் ஒருவர் மிகவும் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாக, நடிகை பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த மாடலான பூஜா ஹெக்டே, கடந்த 2012-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில், ஜீவா நடிப்பில் வெளியான ‘முகமூடி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமா உலகில் அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் தோல்வி அடைந்ததை அடுத்து தெலுங்கில் கால் பதித்த அவர், அங்கு தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்ததால், முன்னணி நடிகையாக உயர்ந்தார். குறிப்பாக கடந்த 2020-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான அல்லு அர்ஜுனின் ‘ஆல வைகுந்தபுரம்லோ’ படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமானார்.
அதன்பிறகு மிகப் பெரிய நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வரும் அவருக்கு, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, விஜயின் ‘பீஸ்ட்’ படங்கள் கை கொடுக்கவில்லை என்றாலும், தற்போது தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில், இண்டிகோ விமானத்தில் பயணித்தபோது நடந்த மோசமான அனுபவத்தை அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “மும்பையிலிருந்து இண்டிகோ விமானத்தில் பயணித்தபோது, அந்த விமானத்தில் பணிபுரியும் விபுல் நகாஷே என்ற விமான ஊழியர், எங்களுடன் எவ்வளவு முரட்டுத்தனமாக இன்று நடந்து கொண்டார் என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
எந்த காரணமும் இன்றி முற்றிலும் ஆணவத்துடனும், அலட்சியத்துடனும் அந்த ஊழியர் நடந்துகொண்ட நிலையில், அவரின் செயல் மற்றும் பேச்சு மிகவும் அச்சுறுத்தும் தொனியில் இருந்தது. வழக்கமாக நான் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி ட்வீட் செய்வதில்லை, ஆனால் விமான ஊழியரின் செயல், இன்று உண்மையிலேயே பயங்கரமாக இருந்ததால், வேறு வழியின்றி இதனை பகிர்ந்து கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இண்டிகோ விமானத்தின் ட்விட்டர் பக்கத்தையும் அவர் டேக் செய்து அவர் பதிவிட்டுள்ளார்.