kerala sexual allegations issue web
சினிமா

“அவர்கள் எவ்வளவு கோழைத்தனமானவர்கள்” ராஜினாமா செய்த மோகன்லால் உள்ளிட்டோரை காட்டமாக விமர்சித்த பார்வதி

Rishan Vengai

மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. 2017-ம் ஆண்டுவரை மலையாள சினிமாவில் இத்தகைய விசயங்கள் இவ்வளவு வீரியமாக இருக்குமென யாரும் நினைத்திருக்கக்கூட மாட்டார்கள். காரணம் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ஒரு கேரள நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் 2017-ல் அம்பலமானபோது வெளிமாநில சினிமாத்துறைகள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமாத்துறையும் அதிர்ச்சியடைந்தது.

பாலியல் வன்கொடுமை

2017ஆம் ஆண்டு நடிகர் திலீப்பால் நடிகை ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் இன்னும் விசாரணையிலேயே நீடிக்கிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு பிரபலமான நடிக்கைக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பெண்களுக்கு என்ன நடக்கும் என்ற வகையில், நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. அந்தகமிட்டியால் 5 ஆண்டுகளுக்கு முன் கேரளஅரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை, கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில்தான், கிட்டத்தட்ட 17 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்திருப்பதாக வெளியான செய்திகள் மலையாள திரையுலகையே தற்போது பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. பலர் தங்களின் கருத்துக்களையும், தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்களையும் தொடர்ந்து முன்னிறுத்தி வரும் சூழலில், மலையாள நடிகர் சங்கத்தில் (AMMA) உறுப்பினர்களாக இருப்பவர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுவருகின்றன.

ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்த மோகன்லால் தலைமை!

பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்த நிலையில், பொறுப்புக்கூறலும் நடவடிக்கையும் எடுக்கவேண்டிய இடத்தில் இருக்கும் மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவர் மட்டுமல்லாமல் நடிகர் சங்கத்தில் {AMMA} இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் அவர்களது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தனர்.

மோகன்லால்

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா செய்வதற்குக் காரணம் சங்கத்து உறுப்பினர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருக்கிறது. இது கடந்த சில நாட்களாக அனைத்து பத்திரிகை ஊடங்களில் பேசும்பொருளாக இருக்கிறது. இதனால் சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் தார்மீக அடிப்படையில் செயற்குழுவை கலைக்க தீர்மானம் செய்துள்ளோம். புது செயற்குழு மற்றும் உறுப்பினர்கள் மறுதேர்தல் வைத்து இன்னும் 2 மாதங்களில் உருவாக்கப்படும்.

புது செயற்குழு மற்றும் தலைமை பொறுப்பு விரைவில் இந்த சங்கத்தை மீண்டும் புதிய பலத்துடனும், உத்வேகத்துடனும் மீட்டெடுக்கும். எங்கள்மேல் உள்ள பிழையை சுட்டிக்காட்டியதற்கு அனைவருக்கும் நன்றி” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோழைகள் என கடுமையாக சாடிய பார்வதி..

கேரள சினிமாத்துறையை ஆட்டிவைத்துவரும் பாலியல் குற்றசாட்டுகள் குறித்து பேசியிருக்கும் நடிகை பார்வதி, ஒட்டுமொத்தமாக இவர்கள் ராஜினாமா செய்தார்கள் என கேள்விப்பட்ட போது இவர்கள் எவ்வளவு கோழைத்தனமானவர்கள் என்று தோன்றியதாக தெரிவித்துள்ளார்.

பர்கா தத்துக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கும் நடிகை பார்வதி, “மலையாள நடிகர் சங்கத்தின் கூட்டு ராஜினாமா பற்றி கேள்விப்பட்டபோது எனக்கு ஏற்பட்ட முதல் எண்ணம், ‘எவ்வளவு கோழைத்தனமானவர்கள் இவர்கள்’ என்றுதான். ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து ஊடகங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டிய நிலையிலிருந்து அவர்கள் விலகிச் செல்வது எவ்வளவு கோழைத்தனமான விசயம். இவர்களின் இந்த கோழைத்தனமான முடிவின் மூலம், அடுத்தக்கட்ட உரையாடல்கள் மற்றும் விவாதங்களை முன்னோக்கி கொண்டு செல்லும் பொறுப்பு மீண்டும் பாதிக்கப்பட்ட பெண்கள் மீது விழுந்துள்ளது. ராஜினாமா செய்த குழு உறுப்பினர்கள் மாநில அரசு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து தீர்வுகாண வேண்டும் என்ற உண்மையான நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது” என்று மோகன்லால் தலைமையிலான கலைக்கப்பட்ட நடிகர் சங்கத்தை நடிகை பார்வதி விமர்சித்துள்ளார்.

மேலும் நடிகர் சங்கத்தின் (AMMA) கடந்தகால நடவடிக்கைகளை விமர்சித்த பார்வதி, “2017ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் முதன்மைக் குற்றம் சாட்டப்பட்டவரை, வழக்கு நடந்துகொண்டிருந்தபோதே ​மீண்டும் வரவேற்றது இதே செயற்குழுதான். குற்றச்சாட்டுகள் பகிரங்கப்படுத்தப்படும் வரை எந்தப் பிரச்சினைகளும் இல்லை என்று மறுத்ததும் இதே செயற்குழு தான்” என்று சாடினார்.

மேலும் அரசாங்கத்தின் தாமதமான நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டிய அவர், ”அரசின் தாமதமான நடவடிக்கை பெண்கள் பாலியல் புகார்களை தெரிவிப்பதற்கும், குற்றவாளிகளை பெயரிடுவதற்குமான சுமையை அதிகமாக்கியது. இந்த தாமதம் பெரும்பாலும் பெண்களின் தொழில் மற்றும் மன ஆரோக்கியத்தின் மீது எவ்வளவு தாக்கம் ஏற்படும் என்பதை புறக்கணிக்கிறது” என்று வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.