சினிமா

நடிகை மீரா மிதுனுக்கு சம்மன்: நாளை விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

நடிகை மீரா மிதுனுக்கு சம்மன்: நாளை விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

kaleelrahman

பட்டியலினத்தவர்களை இழிவாக பேசியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனுக்கு, சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். புகாரில், “ திரைப்பட நடிகை மீரா மிதுன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவை பார்த்தேன். அதில் பட்டியலின மக்களை மிக கேவலமாக திட்டி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். பட்டியலின சமூகத்தையே மிக கேவலமாகவும், மோசமான வார்த்தைகளாலும் திட்டியது மட்டுமல்லாமல் திரைப்பட துறையில் இருந்தே பட்டியலின சமூகத்தை வெளியேற்ற வேண்டும் என்று கூறி வீடியோ பதிவிட்டார்.

எனவே மீரா மிதுன் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகாரில் கூறினார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி நடிகை மீரா மிதுன் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 153- கலகம் செய்ய தூண்டி விடுதல், 153(ஏ)(1)(ஏ) - சாதி, மத, இன தொடர்பாக விரோத உணர்ச்சியை தூண்டி விடுதல், 505(1)(பி) - பொதுமக்களின் அமைதியை குலைக்கும் வகையில் பயமுறுத்தல், அச்சம் ஏற்படுத்துதல், 505(2) - பொதுமக்களிடையே தவறான தகவலை பரப்பி தீங்கு இளைத்தல் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டங்களின் கீழ் 3(1)(ச), 3(1)(ள), (3)(1) (ர) ஆகிய பிரிவுகள் என மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை மீரா மிதுனுக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு சம்மன் கொடுத்துள்ளது. நாளை காலை 10 மணிக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் நடிகை மீரா மிதுன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.