ஜோதிகா - சூர்யா pt web
சினிமா

“ரசிகையாக மட்டுமே இதைச் சொல்லுகிறேன்; கங்குவா மீது இவ்வளவு எதிர்விமர்சனங்கள் ஏன்?” - ஜோதிகா ஆதங்கம்

கங்குவா திரைப்படத்தில் உள்ள நல்ல விஷயங்களை விமர்சகர்கள் கவனிக்காமல் விட்டது ஏன் என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

Angeshwar G

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான படம் ‘கங்குவா’. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, ரெடின்ஸ் கிங்க்ஸி என பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ், ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையத்திருக்கிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் நிலையில், மதன் கார்க்கி வசனங்களை எழுதியுள்ளார். நிசாத் யூசூப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

கங்குவா

3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா படமானது தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உட்பட மொத்தம் 10 மொழிகளில் வெளியானது. இது 38 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. ஒரு தரப்பு படம் நன்றாக இருக்கிறது என்றாலும், மறுதரப்போ படம் சுமார் என்றே தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் நடிகை ஜோதிகா கங்குவா திரைப்படத்திற்கு ஆதரவாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தப் பதிவை சினிமா ரசிகையாக மட்டுமே எழுதுகிறேன்.. சூர்யாவின் மனைவியாக எழுதவில்லை. கங்குவா திரைப்படத்தை நல்ல திரைப்படமாகவே பார்க்கிறேன். இதற்காக, சூர்யா கண்டிப்பாக பெருமைப்பட வேண்டும்.

கங்குவா மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது - நடிகை ஜோதிகா

நிச்சயமாக முதல் அரை மணி நேரத்திற்கு ஒலி பிரச்னை இருந்தது. இதற்காக முழு படத்தையும் குறை சொல்லுவதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எதிர்மறை விமர்சனங்கள் ஆச்சர்யமாக இருக்கிறது. ஏனெனில், மிகப் பழைய கதைகளுடனான அறிவுக்கு மாறான பெரிய பட்ஜெட் படங்களுக்கோ, பெண்களை பின்தொடருதல், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த, அதிகம் சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்களுக்கோ இந்த அளவிற்கு விமர்சனம் செய்யப்படவில்லை.

பெருமையாக இருங்கள்

முதல் நாளிலேயே, அதிலும் முதல் ஷோ முடிவதற்கு முன்பே கங்குவாவுக்கு இத்தனை எதிர்மறை விமர்சனங்கள் வந்தது வருத்தமளிக்கிறது. கங்குவா படக்குழுவினர் பெருமையாக இருங்கள். எதிர்மறையாக விமர்சனம் செய்பவர்கள் அதைமட்டும்தான் செய்கிறார்கள். சினிமாவை உயர்த்துவதற்கு வேறொன்றையும் அவர்கள் செய்யவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.