சூர்யா - ஜோதிகா - தியா இன்ஸ்டாகிராம்
சினிமா

“பெருமைப்படுகிறேன் தியா” - சூர்யா - ஜோதிகா மகள் இயக்கிய ஆவணப்படத்திற்கு விருது... வாழ்த்திய ஜோ!

தியா சூர்யா இயக்கிய ஆவணப்படத்திற்கு விருது கிடைத்துள்ளதை அடுத்து, வாழ்த்து தெரிவித்து நடிகை ஜோதிகா பதிவிட்டுள்ளார்.

Prakash J

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான சூர்யா - ஜோதிகா, இன்றளவும் பெர்சனல் மற்றும் தொழில் வாழ்க்கையில் ஜொலித்துக்கொண்டே உள்ளனர். இந்த தம்பதிக்கு, தியா மற்றும் தேவ் என ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் மகள் தியா சூர்யா தற்போது ஆவணப்பட இயக்குநராகி இருக்கிறார். அப்படி அவர் இயக்கிய ஆவணப்படத்திற்கு தற்போது விருது கிடைத்துள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவித்து நடிகை ஜோதிகா இன்ஸ்டா பதிவிட்டுள்ளார்.

சூர்யா - ஜோதிகா தம்பதியின் மகளான தியா சூர்யா, தனது பள்ளியில் நடைபெற்ற போட்டிக்காக ஆவணப்படம் ஒன்றினை எடுத்து விருது பெற்றுள்ளார். அவர் இயக்கிய, ‘லீடிங் லைட்’ ஆவணப்படம் விருது பெற்றுள்ளது. மேலும், சிறந்த திரைக்கதை எழுத்தாளர் விருதும் தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சான்றிதழ்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெருமிதம் அடைந்த அவரது தாயார் ஜோதிகா தனது இன்ஸ்டா பக்கத்தில், “சினிமா துறையில் ஒளிப்பதிவு தொடர்பான வேலைகளில் ஈடுபடும் பெண்களுக்கு நடக்கும் விஷயங்களை ஆவணப்படமாக எடுத்ததற்குப் பெருமைப்படுகிறேன் தியா. இதேமாதிரி தொடர்ந்து செயல்படு. இந்த மாதிரி விஷயங்கள்மீது வெளிச்சம் பாய்ச்சியதற்கு மிக்க நன்றி“ எனப் பதிவிட்டிருப்பதுடன் அந்தப் படத்தின் யூடியூப் லிங்க்கையும் இணைத்துள்ளார்.

மகன் தேவ், மகள் தியாவுடன் - ஜோதிகா

தாய் தந்தை போலவே தியாவும் சினிமா பக்கம் திரும்பினாலும்கூட, சினிமாவை பொழுதுபோக்கு தளமாக மட்டுமன்றி ஆவணங்களுக்கான இடமாகவும் பயன்படுத்திவருவது, அவருக்கு கூடுதல் பாராட்டுகளை பெற்றுத்தருகிறது.

இதையும் படிக்க: ஈரான் வீசிய ஏவுகணைகள்... தப்பிக்க ஓடினாரா இஸ்ரேல் பிரதமர்? வைரல் வீடியோ.. உண்மை என்ன?