ஜிஹா கான், சுராஜ்பஞ் சோலி file image
சினிமா

’கஜினி’ பட நடிகை தற்கொலை வழக்கில் விடுதலையான காதலர்! 10 ஆண்டு வழக்கில் வெளியான தீர்ப்பு

'கஜினி' பட நடிகை ஜியா கானை தற்கொலைக்குத் தூண்டியதாகக் கைது செய்யப்பட்ட நடிகர் சூரஜ் பஞ்சோலி, அவ்வழக்கில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டார்.

Prakash J

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம், ’கஜினி’. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலிலும் சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து இப்படம் பிற மொழிகளிலும் எடுக்கப்பட்டது. கடந்த 2008ஆம் ஆண்டு, அமிர் கான் நடிப்பில் அதே பெயரில் இப்படம் வெளியானது. இந்தப் படத்தில் ஜிஹா கான் என்பவரும் நடித்திருந்தார்.

அமெரிக்கா வாழ் இந்திய தம்பதிக்கு மகளாகப் பிறந்த ஜிஹா கான், மும்பையில் குடியேறினார். கடந்த 2007ஆம் ஆண்டு, ராம் கோபால் வர்மாவின் ’நிஷாபத்’ படம் மூலம் பாலிவுட்டில் ஜொலிக்க ஆரம்பித்த ஜிஹா கான், தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்தார்.

இதனிடையே, கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி ஜிஹா கான் மும்பையில் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், அவர் கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் காதலர் சுராஜ் பஞ்ஜொலி தம்மை அடித்து துன்புறுத்தியதாகவும் ஜிஹா கான் எழுதியிருந்ததாகத் தகவல் சொல்லப்பட்டது. மேலும், ஜிஹா கான் இறப்பதற்கு முன் கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, தீவிர விசாரணை நடத்திய போலீஸார், ஜிஹா கானின் காதலரும் நடிகருமான சுராஜ் பஞ்ஜொலியை கைது செய்தனர்.

அதே ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அவர், ஜூலை மாதம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து இந்த வழக்கு குறித்த விசாரணையின்போது, ஜிஹா கானின் தாயார், தன் மகளை சுராஜ் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார் எனக் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், அந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் சுராஜ் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு, மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ”நடிகை ஜிஹா கான் தற்கொலை செய்யப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை. ஆதலால், நடிகர் சுராஜ் குற்றமற்றவர்” என தீர்ப்பளித்ததுடன், அவரை இந்த வழக்கில் இருந்தும் விடுதலை செய்துள்ளது.

தீர்ப்புக்குப் பிறகு ஜிஹா கான் தாயார் ரபியா, ”இது ஒரு கொலை வழக்கு. என் மகளுக்காக நீதி கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகுவேன். நான் நம்பிக்கையை கைவிட மாட்டேன்; தொடர்ந்து போராடுவேன்” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் சுராஜ், “ஜிஹா கான் மரணத்திற்கு நான் பொறுப்பல்ல” எனத் தெரிவித்துள்ளார்.