சென்னை திருவொற்றியூரில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த துணை நடிகையின் உடலை போலீசார் மீட்டனர்.
23 வயதான பத்மஜா என்ற நடிகை திரைப்படங்களில் துணை நடிகையாகவும், சின்னத்திரை நாடகங்களிலும் நடித்து வந்துள்ளார். இவர் திருவள்ளூர் காலடிப்பேட்டையில் தனது கணவர் பவானுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்னை இருந்ததாக தெரிகிறது. தங்களுடைய இரண்டு வயது குழந்தையை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு, வார இறுதியில் மட்டும் பத்மஜா-பவான் தம்பதி பார்த்து வந்துள்ளனர்.
மேலும் கருத்து வேறுபாடு காரணமாக பத்மஜா கடந்த மாதம் கணவரிடமிருந்து பிரிந்து தனியாக இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் பத்மஜா தங்கி இருந்த வீட்டில் இரண்டு நாட்களாக கதவு திறக்கப்படாமல் மின் விளக்குகளும் அணைக்கப்படாமல் இருந்துள்ளன. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
தகவலை அடுத்து பத்மஜா வீட்டிற்கு வந்த காவலர்கள் கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்தனர். உள்ளே பத்மஜா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடலை மீட்ட காவலர்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பத்மஜா உயிரிழப்பு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தன் சகோதரிக்கு பத்மஜா வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் பணப்பிரச்னை குறித்தும் குடும்ப பிரச்னை குறித்தும் கவலை தெரிவித்துள்ளார். அந்த வீடியோவை கைப்பற்றிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.