சினிமா

'மாஸ்டர்' நீக்கப்பட்ட காட்சியில் நான் சிரிக்கவே இல்லை! - கெளரி கிஷன் சிறப்புப் பேட்டி

'மாஸ்டர்' நீக்கப்பட்ட காட்சியில் நான் சிரிக்கவே இல்லை! - கெளரி கிஷன் சிறப்புப் பேட்டி

sharpana

”நான் சிரித்ததால்தான் அந்தக் காட்சிகளை நீக்கினார்கள் என்பதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. நான் சிரிக்கவே இல்லை. அப்படியொரு முக்கியமான காட்சியில் நடிக்கும்போது யாராவது காமெடியாக சிரித்து நடிப்பார்களா?” - ’மாஸ்டர்’ நடிகை கெளரி கிஷன். 

’96’ படத்தின் மூலம் பள்ளி, கல்லூரி கால காதல் நினைவுகளைக் கிளறி, அழகான நடிப்பால் வருடிக்கொடுத்த கெளரி கிஷனின் இரண்டாவது படம் ’மாஸ்டர்’. இதில், நீக்கப்பட்ட காட்சிகள் தற்போது வெளியாகி பாராட்டுக்களைக் குவித்துக்கொண்டிருக்கிறது. அதேசமயம், சவீதா என்ற கல்லூரி மாணவியாக வரும் கெளரி கிஷன் சீரியஸான அந்தக் காட்சியில் சிரிக்கிறார் என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து கலங்கடித்துக் கொண்டிருக்கிறார்கள். தனுஷின் ‘கர்ணன்’, வினோத் கிஷனுடன் பெயரிடாதப் படம் என அடுத்தடுத்து படங்கள் வெளியாகவிருக்கும் குதூகலத்தில் இருக்கும் கெளரி கிஷனிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.   

வரவேற்பை பெற்றிருக்கும் ‘டெலிட்டட்’ காட்சிகள், மாஸ்டர் படத்திலிருந்து நீக்கப்பட்டத்தில் வருத்தம் ஏற்பட்டதா?

"அந்தக் காட்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் டைம் எடுத்தே நான்கைந்து நாள்கள் படமாக்கினார்கள். லோகேஷ் கனகராஜ் சார் என்ன நினைக்கிறாரோ அவரது முடிவுக்கு மரியாதை கொடுக்கவே நினைக்கிறேன். அந்தக் காட்சிகள் முக்கியமானதாக தெரியவில்லை என்றால் கட் செய்துதான் ஆகவேண்டும். அதேசமயம், படத்தில் அந்தக் காட்சியை கண்டிருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன். பெண்கள் சந்திக்கும் பிரச்னைக் குறித்து பேசும் சீரியசான காட்சியை படமாக்க துணிந்ததே மிகப்பெரிய விஷயம். இப்படியொரு பெரிய படத்திலும் பெண்கள் பிரச்னை குறித்த காட்சியிலும் நடித்தது குறித்து பெருமையாக இருக்கிறது. படத்தில் இல்லை என்றாலும் டெலிட்டட் சீன் வைரலாகியுள்ளது சந்தோஷமா இருக்கு. அவ்வளவு பவர்ஃபுல்லான காட்சி இடம்பெறவில்லை என்று எனக்கு எந்த வருத்தமும் கிடையாது."

அந்தக் காட்சிகள் படத்தில் வரவில்லை என்பது படத்தைப் பார்த்துதான் தெரியுமா? முன்கூட்டியே தெரியுமா?

"டீசரில் வந்தபோது எல்லோரையும் போல நானும் மிகுந்த ஆவலுடன் திரையில் காண காத்திருந்தேன். ஆனால். படத்தில் பார்க்கும்போது இல்லை. பிரிவியூ ஷோவுக்கெல்லாம் நான் செல்லவில்லை. படம் 13 ஆம் தேதி வெளியானபோது படத்தைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். இடைவேளை வரை வராமல் இருந்தபோது காட்சி இல்லை என்பது எனக்கு புரிந்துவிட்டது."

அந்த சீரியஸான காட்சிகளில் நீங்கள் சிரித்துக் கொண்டிருந்ததால்தான் காட்சிகளை நீக்கிவிட்டார்கள் என்று உங்களை விமர்சிக்கிறார்களே?

"நான் இதனை உங்களிடம் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். சிரித்ததால்தான் அந்தக் காட்சிகளை நீக்கினார்கள் என்பதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. நான் சிரிக்கவே இல்லை. மிகவும் முக்கியமான காட்சி என்பதால் அனைவரும் உணர்ந்தே உணர்வுபூர்வமாக நடித்தோம். அப்படியொரு முக்கியமான காட்சியில் நடிக்கும்போது யாராவது காமெடியாக சிரித்து நடிப்பார்களா? அங்கு சிரிக்க என்ன இருக்கிறது?  

சவீதா கேரக்டரில் பாதிக்கப்பட்டப் பெண்ணாக சிறப்பான நடிப்பையே வழங்கினேன். ஒருவேளை காட்சியில் அழுகிற மாதிரி நடித்ததாலும் கூச்சப்படுவதுபோல் நடித்ததாலும் சிரிப்பதுபோல் இருந்ததா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் கண்டிப்பாக சிரிக்கவே இல்லை. ரசிகர்கள் இப்படி புரிந்துகொள்வார்கள் என்று  எதிர்பார்க்கவில்லை.

படத்தில் என் சொந்த  குரலில்தான் பேசினேன். டப்பிங் கொடுக்கும்போதும் உணர்வுபூர்வமாகத்தான் கொடுத்தேன். அப்படி, காட்சியில் சிரித்துக்கொண்டிருந்தால் சரியில்லை என்பதை என்னிடம் சொல்லி சரிப்படுத்தியிருப்பார்கள். எடிட் கூட செய்திருப்பார்கள். அப்படி ஒன்றுமே செய்யல்லையே ஏன்? என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

என்னை ட்ரோல் செய்த மீம்ஸ்களைப் கொஞ்சம் பார்த்தேன். என்னிடம் தனிப்பட்ட முறையில் குடும்பத்தினரும் நண்பர்களும் சிரிப்பது குறித்து கேட்டார்கள். ’டெலிட்டட் சீன் நல்ல ரீச் ஆகியிருக்கு. அதிகம்பேர் இந்த சீன் ஏன் வரல? என்று அக்கறையுடன் கேட்பது ரொம்ப நல்ல விஷயம். அதனால், விமர்சிப்பது குறித்து நான் கவலைப்படவில்லை. நல்ல கருத்து மக்களிடம் போய் சேர்ந்துள்ளதே என்று பாஸிட்டிவாகவே எடுத்துக்கொள்கிறேன். அப்படியே, விமர்சிப்பவர்கள் சொல்வதுபோல் நான் சிரித்ததாக எடுத்துக்கொண்டாலும் ‘சவீதா என்ற கேரக்டர் சீரியஸ் காட்சியிலும் சிரிக்கிறார்கள். லைஃப்பையும் அப்படித்தான் எதிர்கொள்கிறார்கள்’ என்று இதையும் பாசிட்டிவாக எடுத்துக்கொள்றேன். புத்திசாலித்தனமான அப்ரோச்தானே இது? வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்னையை எதிர்கொள்கிறோம். பிரச்னையை சிரிப்போடு அப்ரோச் செய்வது நல்லதுதான்."

பாலியல் வன்கொடுமை சார்ந்த பிரச்னைகளில் உங்கள் பார்வை என்ன?

"முன்பிருந்த காலத்தைவிட பெண்கள் தற்போது முன்னேறி இருக்கிறார்கள். சுயமாக தனித்து வாழ்கிறார்கள். இதனை எல்லாம் பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதேநேரத்தில், பாலியல் வன்கொடுமை சார்ந்த செய்திகளை பார்க்கும்போது மிகவும் ஃபீல் பண்ணுவேன். ’இந்த மாதிரி பெண்ளை துன்புறுத்துகிறவர்கள் இன்னும் சமூகத்தில் ஏன் இருக்கிறார்கள்? அவர்களை ஏன் நீதித்துறை விட்டு வைத்திருக்கிறது? தண்டனைகளை உடனடியாக கொடுக்காதது ஏன்?’ போன்ற  கேள்விகளை கேட்டுக்கொள்வேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.

விஜய்யுடன் நடித்த அனுபவம்?

"சிறு வயதிலிருந்தே நான் விஜய் சாரின் ஃபேன். அவருடனேயே நடித்தது என்ஜாய்ஃபுல்லான அனுபவம். மிகவும் கனிவானவர். ஷூட்டிங்கில் யார் பேசினாலும் பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாமல் காது கொடுத்துக் கேட்பார்; முக்கியத்துவம் கொடுப்பார். முன்பு எல்லோரும் விஜய் சார் எளிமையானவர் என்பார்கள். அதனை,கண்கூடாகப் பார்த்து பிரமித்துப்போனேன். ரொம்ப ரொம்ப எளிமையானவர். எல்லோரிடமும் ரொம்ப மரியாதையாகப் பேசுவார்."

’96’ படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்ததால்தான் ’மாஸ்டர்’ வாய்ப்பு கிடைத்ததா?

"அப்படியெல்லாம் இல்லை. ’96' படத்திற்குப் பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. காலேஜ் சென்றுகொண்டிருந்ததால் என்னால் உடனே நடிக்க முடியவில்லை. லோகேஷ் சார் 'கைதி' பட ரிலீஸுக்கு முன்பே அழைத்து சவீதா கேரக்டர் குறித்து சொன்னபோது நான் ரொம்ப எக்ஸைட் ஆகிவிட்டேன்."

’96’ ஜானு – ’மாஸ்டர்’ சவீதா எது அதிக ரீச் ஆகியிருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

"கண்டிப்பா ஜானுதான். தமிழில் என் முதல் படமல்லவா? படம் ரிலீஸ் ஆகி இரண்டு வருடம் ஆகியும் எங்கு சென்றாலும் யாரும் என்னை கெளரி என்று அழைப்பதில்லை. ஜானு என்றே அழைக்கிறார்கள். நிறைய பேர் தங்களுடைய முதல் காதலை என்னிடம் ஷேர் செய்திருக்கிறார்கள். நிறைய கேரக்டர் பண்ணியிருந்தாலும் ஜானுதான் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்."

மாஸ்டரில் தேர்தலில் நிற்கும் மாணவியாக போல்டாக நடித்திருக்கிறீர்களே... நிஜத்தில் எப்படி?

"படிக்கும்போது வகுப்பில் நன்கு படிப்பவர்களில் நானும் ஒருத்தி. முதல் பெஞ்ச் மாணவி. கிளாஸ் லீடர் நான். அதனால், படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் நான் போல்டுதான்."

‘கர்ணன்’ படத்தில் நடிப்பது குறித்து?

" ’கர்ணன்’ படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறேன். மாரி செல்வராஜ் சார் மிகவும் திறமையான இயக்குநர். அவரின், ’பரியேறும் பெருமாள்’ படத்தைப் போலவே, இதுவும் மிகவும் சென்சிட்டிவான சப்ஜெக்ட். முதன்முறையாக கிராமத்துக் கதையில் நடித்திருக்கிறேன். எக்ஸ்பீரியன்ஸ் வேற மாதிரி இருந்தது. எல்லோரையும் போலவே கர்ணனை திரையில் காண ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறேன்."

விஜய் – விஜய் சேதுபதி – தனுஷ் மூவரிடமும் பிடித்த விஷயம்?

"விஜய் சார் கனிவானவர். விஜய் சேதுபதி சார் ரொம்ப இயல்பாக ரியலாக இருப்பவர். படத்தில் எப்படி இருக்கிறாரோ அப்படித்தான் நிஜத்திலும். அவரிடம் வித்தியாசமே பார்க்க முடியாது. ஷூட்டிங்னு வந்துட்டா தனுஷ் சார் நடிப்பில் அப்படியே பின்னிவிடுவார். வியந்துப்போய் பார்ப்பேன். மூன்று பேருடனும் நடித்ததை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்."

எந்த நடிகருடன்  நடிக்க விருப்பம்?

"எனக்கு எல்லோருடனும் நடிக்க விருப்பம். இன்னும் சினிமாவில் நடிக்கக் நிறைய கத்துக்கணும். ரஜினி, கமல்ஹாசன் சாருடன் நடித்துவிட்டால் கனவு நிறைவேறிவிடும். அனைத்து படங்களிலும் சிறந்த நடிப்பை வழங்கவேண்டும் என்றே நினைக்கிறேன்."

- வினி சர்பனா