சினிமா

”’கணம்’ படத்தை முடிக்கும்வரை எல்லோருக்கும் அம்மாவாகவே இருந்தேன்” - நடிகை அமலா உருக்கம்

”’கணம்’ படத்தை முடிக்கும்வரை எல்லோருக்கும் அம்மாவாகவே இருந்தேன்” - நடிகை அமலா உருக்கம்

sharpana

”நான் நிஜ வாழ்க்கையிலும் ஒரு தாய் தான். அந்த நிலையை நான் பொக்கிஷமாகக் கருதுகிறேன். ’கணம்’ படத்தை முடிக்கும் வரை, எல்லோருக்கும் அம்மாவாகவே இருந்தேன்” என்று நெகிழ்ச்சியுடன் ‘கணம்’ படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் நடிகை அமலா.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ’கணம்’ படத்தில் நடிகர் சர்வானந்த், அமலா , ரீது வர்மா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். 80 ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் நடிகையான அமலா இப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ‘துருவங்கள் 16’, ’மாஃபியா’ படங்களில் பணிபுரிந்த இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய், ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் இந்தப்படத்திலும் கூட்டாக பணிபுரிகிறார்கள்.

சமீபத்தில் இப்படத்தின் ’அம்மா என் அம்மா... நான் போகின்ற திசையெங்கும் நீயம்மா’ பாடல் உமா தேவி வரிகளில் சித் ஸ்ரீராம் குரலில் வெளியாகி கவனம் ஈர்த்தது. அஜித் ரசிகர்கள்கூட ‘வலிமை’ சார்பாக இப்பாடலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், ’கணம்’ படத்தில் சர்வானந்துக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை அமலா மனம் திறந்திருக்கிறார். இதுகுறித்து நடிகை அமலா பேசும்போது,

“மகனுக்கும், அம்மாவுக்கும் இடையிலான அன்பு என்றும் அழியாது என்பதைச் சொல்வதற்காகவே அம்மா பாடல் உருவாக்கப்பட்டது. ஜேக்ஸ் பிஜாயும், பாடகர் சித் ஸ்ரீராமும் உண்மையிலேயே ஒரு மாயாஜாலத்தைச் செய்துள்ளனர். முதல்முறை அந்தப் பாடலைக் கேட்ட போது இதமாக, மென்மையாக இருந்தது. இயக்குநர் ஸ்ரீ கார்த்திக், ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்க், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என ஒட்டுமொத்தப் படக்குழுவையும் என்னால் உணர முடிந்தது. அந்த உணர்வில் அனைவரும் பிணைந்தனர்.

பிறகு படப்பிடிப்பின் போது பாடலைத் துண்டு துண்டாகத்தான் கேட்டோம். தற்போது பாடல் வெளியான பிறகு, பாடலை முழுமையாகக் கேட்க முடிந்தது. அதை என் இதயத்தில் உணர முடிந்தது. டைரக்டர் ஸ்ரீகார்த்திக்குக்கு தனது அம்மாவின் மீதிருக்கும் அன்பின் காரணமாகவே இந்தப் படம் உருவானது. இந்தப் பாடல் அந்த அன்பைப் பற்றியது. கண்டிப்பாக உங்களாலும் உணர முடியும் என்று நான் கூறுவேன்.

அதீத திறமை, நெறிகள், நம்பிக்கை, அன்பு என எல்லாம் சேர்ந்து வருவதற்கான புள்ளி இது என்பது மிகவும் அழகாகத் தெரிகிறது. ‘கணம்’ படத்தில் அந்த அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க முடிந்தது எனக்குக் கிடைத்தப் பெருமையாக உணர்கிறேன். நான் நிஜ வாழ்க்கையிலும் ஒரு தாய்தான். அந்த நிலையை நான் பொக்கிஷமாகக் கருதுகிறேன். நான் படத்தை முடிக்கும் வரை, எல்லோருக்கும் அம்மாவாகவே இருந்தேன். அது மிகவும் மதிப்புமிக்க விஷயம். அதை நான் என்றும் மறக்க மாட்டேன்.

எஸ்.ஆர்.பிரபு மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் போன்ற அற்புதமான தயாரிப்பாளர் கிடைத்தது டைரக்டர் ஶ்ரீகார்த்திக்கின் அதிர்ஷ்டம். ஏனென்றால் அவர்கள் படத்தையும், ஶ்ரீகார்த்திக்கையும் முழுமையாக நம்புகிறார்கள். பட உருவாக்கத்தில் நாங்கள் ரசித்ததைப் போல படம் பார்க்கும் போது நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று அமலா அக்கினேனி தெரிவித்துள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்துள்ள இந்தப் படம் தெலுங்கில் ‘ஒகே ஒக ஜீவிதம்’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.