சினிமா

என்னைப்போல் எல்லா பெண்களும் தைரியமாக சொல்ல வேண்டும் - அமலாபால் பேச்சு

என்னைப்போல் எல்லா பெண்களும் தைரியமாக சொல்ல வேண்டும் - அமலாபால் பேச்சு

rajakannan

பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் பிரச்னைகளை #Metoo மூலம் தைரியமாக சொல்ல முடிகிறது என நடிகை அமலாபால் கூறியுள்ளார்.

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இதற்காக சர்வதேச அளவில் தொடங்கப்பட்டது தான் #MeToo என்ற பிரச்சாரம். அதன் தாக்கம் இந்தியாவிலும் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. பாலிவுட் நடிகைகள் பலர் முக்கிய பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர். பாடகி சின்மயி புகாரை அடுத்து தமிழகத்திலும் இந்த விவகாரம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், ராட்சசன் பட நிகழ்ச்சியில் பேசிய நடிகை அமலாபால் #Metoo குறித்து தனது கருத்தினை கூறியுள்ளார், “சமூக வலைதளங்கள் மூலம் நிகழும் #Metoo மிகமுக்கியமானது. இதன் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பிரச்னைகளை இதன் மூலம் தைரியமாக சொல்ல முடிகிறது. எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது அதனை நான் முன்வந்து வெளியில் சொன்னேன். அதனைப்போலவே எல்லாப் பெண்களும் சொல்ல முன் வர வேண்டும்” என்று பேசினார் அமலா பால்.

முன்னதாக, நடனப்பள்ளி உரிமையாளர் அழகேசன் என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மாம்பலம் காவல் நிலையத்தில் நடிகை அமலாபால் கடந்த ஜனவரி மாதம் புகார் அளித்து இருந்தார். மலேசியாவில் இருக்கும் தனது நண்பருடன் டின்னர் சாப்பிட செல்ல வேண்டும் என அழகேசன் அழைத்ததாக தனது புகாரில் அமலா பால் கூறியிருந்தார். அமலாபால் புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் தொழிலதிபர் அழகேசனை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்தனர்