ஏழைகளுக்கு தனது அறக்கட்டளை மூலம் இலவச தடுப்பூசியை செலுத்தி உதவியிருக்கிறார் நடிகை பிரணிதா சுபாஷ்.
கொரோனா சூழலில் தனது பிரணிதா அறக்கட்டை மூலம் தொடர்ச்சியாக கொரோனா நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் நடிகை பிரணிதா சுபாஷ். மருத்துவமனைகள் படுக்கைகள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வாங்கிக்கொடுப்பது என பல்வேறு சேவைகளை செய்துவருபவர், சமீபத்தில்கூட கன்னட திரைப்படத்துறையின் மேக்கப் கலைஞர்கள் 100 பேருக்கு அரிசி மளிகைப்பொருட்களை வழங்கி உதவினார்.
இந்நிலையில், தனது அறக்கட்டளையில் முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, இன்று பெங்களூருவில் பதிவு செய்தவர்களுக்கு தடுப்பூசி முகாம் அமைத்து ஆர்.வி மருத்துவமனையில் தனது சொந்த செலவில் இலவச தடுப்பூசியை வழங்கினார்.
இதற்கு முன்னதாக, கன்னட நடிகையான பிரணிதா சுபாஷ் கடந்த 2011 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான ‘உதயன்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, கார்த்தியின் ‘சகுனி’, சூர்யாவின் ‘மாஸ்’ உள்ளிட்டப் படங்களில் ஹீரோயினாக நடித்து கவனம் பெற்றார்.
கடைசியாக, அதர்வா முரளியுடன் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்தவர், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து வந்தார்.