சினிமா

”மருத்துவர்கள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள்; கண்டிக்கத்தக்கது” - மோகன்லால், பிரித்விராஜ்

”மருத்துவர்கள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள்; கண்டிக்கத்தக்கது” - மோகன்லால், பிரித்விராஜ்

sharpana

”தங்கள் உயிரை பணயம் வைத்து பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எதிரான அட்டூழியங்கள் கண்டிக்கத்தக்கது” என்று மலையாள நடிகர்கள் மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜ் மருத்துவர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 கடந்த ஆண்டு இந்தியாவில் மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்தே முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து மக்கள் உயிரைக் காப்பாற்ற போராடி வருகிறார்கள். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தே, இதுவரை இந்தியா முழுக்க  500 க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் செவிலியர்களும் சுகாதாரப் பணியாளர்களும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையால் படுக்கை வசதி,ஆக்சிஜன் பற்றாக்குறை வசதியின்மையால் நோயாளிகள் உயிரிழந்தால் நோயாளிகளின் குடும்பத்தினர் மருத்துவர்களை தாக்கும் அவலநிலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. சமீபத்தில்கூட டெல்லி அப்போலோ மருத்துவமனையில் நோயாளியின் உறவினர் வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தியது இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலைத் தொடரக்கூடாது என்று ஆங்காங்கே மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால், இந்திய மருத்துவக் கழகமும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு “நாடு முழுவதும் மருத்துவர்களைக் காக்க தேசியளவிலான பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டுவரவேண்டும்” என்று கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,மலையாள முன்னணி நடிகர் மோகன்லால், தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ”கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா என்னும் கொள்ளை நோயை எதிர்த்து நாம் அனைவரும் போராடிவருகிறோம். இந்தப்போரில், மருத்துவர்கள் உட்பட சுகாதாரப்பணியாளர்கள் முன்னணி போராளிகள். தங்கள் உயிரை பணயம் வைத்து பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எதிரான அட்டூழியங்கள் கண்டிக்கத்தக்கது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார். அவரைத்தொடர்ந்து, நடிகர் பிரித்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மருத்துவர்கள்தான் கொரோனாவிலிருந்து நம்மைக் காக்கும் போர்வீரர்கள். மருத்துவகள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.