தனது பிறந்தநளையொட்டி மகனுக்கு பெயர் சூட்டும் விழாவை நடத்தியிருக்கிறார், நடிகர் யோகி பாபு.
நடிக யோகிபாபு கடந்த ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி வேலூரைச் சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணை குலதெய்வ கோயிலில் எளிமையாக திருமணம் செய்துகொண்டார்.
இந்தத் தம்பதிகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது, அஜித்தின் ‘வலிமை’, விஜய்யின் ‘பீஸ்ட்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராகவும் இன்னும் பல படங்களில் ஹீரோவாகவும் யோகிபாபு பிஸியாக நடித்துவருகிறார். இன்று அவரின் 36 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கிடையே மகனின் பெயர் சூட்டு விழாவையும் விமரிசையாக கொண்டாடி இருக்கிறார். தீவிர முருக பக்தரான யோகிபாபு மகனுக்கு ’விசாகன்’ என்று பெயர் சூட்டி இருக்கிறார்.
’விசாகன்’ முருகன், குமரன் என்று அர்த்தம். முருக பக்தரான யோகி பாபு தனது வாட்ஸப் டிபியில் கூட பல ஆண்டுகளாக முருகர் படமே வைத்துள்ளார். சமீபத்தில் கிரிக்கெட் வீரர் நடராஜனை சந்தித்தபோதுகூட முருகர் சிலையை பரிசளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் விருமாண்டி, இயக்குநர் முத்துக்குமரன் உள்ளிட்டப் பலர் பெயர்சூட்டு விழாவில் கலந்துகொண்டதோடு பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.