‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ திரைப்படத்தில் கதாநாயகன் யாஷ், தனது கதாபாத்திரத்திற்கான பெரும்பாலான வசனங்களை அவரே சொந்தமாக எழுதியதாக, இயக்குநர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார்.
நடிகர் யாஷ் நடிப்பில், இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், கடந்த 2018-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான திரைப்படம் ‘கேஜிஎஃப்: சாப்டர் 1’. இந்தத் திரைப்படத்தின் பிரம்மாண்டம் கன்னட திரையுலகை மட்டுமின்றி, ஒட்டுமொத்த சினிமா உலகையே திரும்பி பார்க்க வைத்தது. இந்தப் படத்தில் ராக்கி கதாபாத்திரத்தில் நடிகர் யாஷின் நடிப்பு மிகப் பெரிய அளவில் பேசப்பட்டதுடன், அவருக்கு பான் இந்தியா அளவில் ரசிகர்களை உருவாக்கிக் கொடுத்தது.
வசூலிலும் சாதனை புரிந்தநிலையில், இந்தக் கூட்டணி ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக, குறிப்பாக பான் இந்தியா படமாக உருவாக்கி வந்தது. கொரோனா காலமாக படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டு வந்தநிலையில், வரும் ஏப்ரல் 14-ம் தேதி ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
‘ராதே ஷ்யாம்’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ போன்ற படங்களைப் போல், இந்தப் படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கிடையில், கடந்த 27-ம் தேதி ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தின் ட்ரெயிலர் பிரம்மாண்டாக வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இதனிடையே, ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தில், தனது கதாபாத்திரத்தின் பெரும்பாலான வசனங்களை நடிகர் யாஷ் சொந்தமாக எழுதியுள்ளதாக, இயக்குநர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார். சொல்லப்போனால், ராக்கி காதாபாத்திரமாகவே மாறி, அற்கான வசனங்களை அவர் செதுக்கியுள்ளார் என்றும் பிரசாந்த் நீல் கூறியுள்ளார்.
‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தின் ட்ரெயிலர் யூ- ட்யூப்பில் சாதனை புரிந்து வரும் நிலையில், ட்ரெயிலரில் நடிகர் யாஷ் அறிமுகமாகும் காட்சி மற்றும் "வன்முறை... வன்முறை... வன்முறை, எனக்குப் பிடிக்கவில்லை, வன்முறையை தவிர்க்கிறேன்.... ஆனால், வன்முறைக்கு என்னைப் பிடித்துள்ளது, என்னால் தவிர்க்க முடியாது" என்ற டயலாக் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
தற்போது அந்த டயாலாக்கை வைத்து, “சாதனை... சாதனை... சாதனை..., ராக்கி சாதனையை விரும்பவில்லை, சாதனையை தவிர்க்கிறார், ஆனால், சாதனைக்கு ராக்கியை பிடித்துள்ளது, அதனை அவரால் தவிர்க்க முடியாது. மொத்தமாக 24 மணிநேரத்தில் 109+ மில்லியன் பார்வையாளர்கள், கன்னடத்தில் 18 மில்லியன் பார்வையாளர்கள், தெலுங்கில் 20 மில்லியன் பார்வையாளர்கள், இந்தியில் 51 மில்லியன் பார்வையாளர்கள், தமிழில் 12 மில்லியன் பார்வையாளர்கள், மலையாளத்தில் 8 மில்லியன் பார்வையாளர்கள்” என்று படக்குழு குறிப்பிட்டுள்ளது.
‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தில் சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ஆனந்த் நாக் உள்ளிட்ட பல நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் பிராசாந்த் நீல் அடுத்ததாக, பிரபாஸை வைத்து ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார்.