நடிகர் விஷால் Facebook
சினிமா

”முடிந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள்”- சவால் விடுத்த விஷால்!

விஷாலுடன் புதிய படங்களில் இணைவதற்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதே நேரத்தில் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பேன் விஷால் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

PT WEB

விஷாலுடன் புதிய படங்களில் இணைவதற்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதே நேரத்தில் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பேன் என விஷால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், கடந்த 2017 - 2019 காலக்கட்டத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். அப்போது 12 கோடி ரூபாய் நிதியை முறைகேடாக செலவழித்ததாக, அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்தத் தொகையை திருப்பி தரக்கோரி தற்போதைய சங்கத்தில் உள்ள நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இச்சூழலில், இனி விஷாலை வைத்து புதிய படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கலந்தாலோசித்து தங்களது பணியை தொடங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுச் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இந்த முடிவை எடுத்துள்ளதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள நடிகர் விஷால், ”சங்கத்தின் நிதிகள் மூத்த உறுப்பினர்களுக்கும், உதவி தேவைப்பட்ட உறுப்பினர்களும் உதவும் வகையில் நலப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டது. இது உங்களுக்கு தெரியாதா? ( தயாரிப்பாளர் சங்கத்தின் செயலருக்கு விஷால் கேள்வி) .

சங்கத்தின் மூலம் செய்ய வேண்டிய பணிகளைப் பாருங்கள், இரட்டை வரிவிதிப்பு, தியேட்டர் கட்டணம் என பல பிரச்னைகள் இருக்கின்றன. நான் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பேன். இதற்கு முன் திரைப்படங்களை தயாரிக்காத, எதிர்காலத்திலும் தயாரிக்காமல் வெறும் ‘தயாரிப்பாளர்கள்’ என சொல்லிக் கொள்பவர்களே... முடிந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள். ஆரோக்கியமான விஷயங்களைப் பற்றி யோசியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.