சினிமா

மீண்டும் வெற்றி வாகை சூடிய நாசர் - விஷால் - கார்த்தியின் பாண்டவர் அணி - கடந்து வந்த பாதை!

நிவேதா ஜெகராஜா

2019ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நுங்கம்பாக்கத்தில் உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளியில் இன்று காலை முதல் நடைபெற்றது. அதன்முடிவில் விஷால் மற்றும் கார்த்தியின் பாண்டவர் அணி மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது.

நுங்கம்பாக்கம், சென்னை என்.எஸ்.கிருஷ்ணன், தங்கவேலு உள்ளிட்ட பழம்பெரும் நடிகர்களால் கடந்த 1952 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது தென்னிந்திய நடிகர் சங்கம். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றியடைந்த நடிகர் விஷால் அணியினரின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் தேர்தல் நடத்திய அதிகாரியும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான பத்மநாபன் தலைமையில் விறுவிறுப்பாக நேற்றே நடைபெற்றன.

ஏற்பாட்டின்படி, தலைவர், துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டு, அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தமுள்ள 29 பதவிகளுக்கான தேர்தலில், விஷால் மற்றும் ஐசரி கணேஷ் தலைமையில் இரண்டு அணிகள் போட்டியிட்டன. அதன்படி தேர்தலில் பதிவான வாக்குச்சீட்டுகள் நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் வங்கியில் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் சமீபத்தில் உயர்நீதிமன்றம் அந்த வாக்குகளை எண்ணும்படி உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

தற்போது வாக்கு எண்ணிக்கையின் முடிவில், நடிகர்கள் விஷால் - கார்த்தி இருந்த அணி வெற்றி பெற்றிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்தலில் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட விஷால் இரண்டாவதொரு முறையாக இந்த வெற்றியை பெற்றிருக்கிறார். போலவே பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட கார்த்தியும் மீண்டும் வெற்றி பெற்றார். இதன்மூலம் பாண்டவர் அணி பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை மீண்டும் கைப்பற்றியுள்ளனர் இருவரும்.

இவர்களை போலவே தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கையிலும் பாண்டவர் அணியே முன்னிலை வகிக்கின்றது. பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசரும், துணைத் தலைவர் பதவிகளுக்கு கருணாஸ், பூச்சி முருகனும் போட்டியிட்டனர்.

இவர்களை எதிர்த்து நின்ற `சுவாமி சங்கரதாஸ் அணி’ சார்பில் போட்டியிட்ட பாக்கியராஜ், குட்டிபத்மினி, உதயா வாக்கு எண்ணிக்கையில் பின்தங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.