சினிமா

``திரைப்பட வாய்ப்பின்றி தவித்த நாள்கள் பல பாடங்களை கற்றுக்கொடுத்தது”-நடிகர் விமல் உருக்கம்

``திரைப்பட வாய்ப்பின்றி தவித்த நாள்கள் பல பாடங்களை கற்றுக்கொடுத்தது”-நடிகர் விமல் உருக்கம்

நிவேதா ஜெகராஜா

திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருந்த கடந்த 3 ஆண்டுகள் பல பாடங்களை கற்றுக் கொடுத்ததாக நடிகர் விமல் கூறியுள்ளார்.

பசங்க திரைப்படம் மூலமாக தமிழ் திரையில் நடிகராக அறிமுகமான விமல். அதன்பின் களவாணி, தூங்கா நகரம் ஆகிய வெற்றிப்படங்களில் நடித்தார். ஆனால் அதற்குப் பிறகு வெளியான அவரின் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை. அதனால் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்தன. இந்த நிலையில் தற்போது பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் விலங்கு என்ற இணைய தொடரில் விமல் நடித்துள்ளார். இந்த தொடர் வரும் 18ஆம் தேதி ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அதில் நடிகர் விமல், நடிகை இனியா, இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ், தயாரிப்பாளர் மதன் மற்றும் ஜி5 குழுவினர் கலந்து கொண்டனர். அதில் பேசிய விமல் விலங்கு மூலம் தான் re-entry ஆவதாக கூறினார். அதுமட்டுமல்லாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த திரைப்பட வாய்ப்பும் இல்லாமல் இருந்தது, தனக்கு பல அனுபவங்களையும், பாடங்களையும் கற்றுக் கொடுத்ததாக தெரிவித்தார். அத்துடன் கடந்த காலத்தில் தனக்கு பேசக்கூட சரியாக தெரியாது. தற்போது அதையும் கற்றுக்கொண்டேன் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் இனிமேல் நல்ல கதைகளை மட்டும் தேர்வு செய்து நடிப்பேன். இனி மற்றவர்கள் கூறுகிறார்கள் என எந்த கதையிலும் நடிக்கமாட்டேன், எனக்கு பிடித்தால் மட்டுமே நடிப்பேன் எனவும் விமல் தெரிவித்தார்.

உண்மை சம்பவ பின்னணியில் புனைவுடன் உருவாக்கப்பட்டிருக்கும் விலங்கு வெப் தொடர் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.