சீரியல் நடிகர் விகாஸ் சேத்தி முகநூல்
சினிமா

பிரபல இந்தி சீரியல் நடிகர் 48 வயதில் மாரடைப்பால் மரணம்!

க்யூன்கி சாஸ் பி கபி பஹு தி சீரியலில் அபிர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான விகாஸ் சேத்தி, தன்னுடைய 48வது வயதில் மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

2000களில் மிகவும் பிரபலமான சீரியலாக அறியப்பட்ட ‘க்யூன்கி சாஸ் பி கபி பஹு தி’ சீரியலில் அபிர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர்தான், விகாஸ் சேத்தி. இவருக்கு தற்போது வயது 48.

இவருக்கு திருமணமாகி ஜான்வி சேத்தி என்ற மனைவியும், இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளனர். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சீரியல் சசுரால் சிமர் கா (தமிழில் மூன்று முடிச்சு என்ற பெயரில் டப்பிங் சீரியலாக வெளியாகி பிரபலமடைந்த சீரியல் இது).

இவர் சீரியல் மட்டுமல்லாது படங்களிலும் நடித்து வந்தார். உதாரணத்துக்கு கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான ‘கபி குஷி கபி கம்’ படத்திலும் (அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஹ்ரித்திக் ரோஷன் என பலர் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற திரைப்படம்) ராபி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகர் அர்ஜுன் ராம்பால் மற்றும் தியா மிர்சா நடித்த 2001 திரைப்படமான ‘தீவானப்பனி’-யிலும் நடித்தார். 2019 ஆம் ஆண்டில் ஐஸ்மார்ட் ஷங்கர் என்ற திரைப்படத்திலும் குறிப்பிடத்தக்க பாத்திரத்தில் நடித்தார்.

இவருக்கு கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், இவரை சோதித்த மருத்துவர்கள் இரவிலேயே இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்றும், தூக்கத்திலேயே உயிர் பிரிந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இவரின் மரணம் குறித்து இவரின் குடும்பத்தார் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் வெளியிடவில்லை. இந்நிலையில் இவர் இறந்துவிட்டதை கேள்வியுற்ற ரசிகர்கள் பலர், இவரின் குடும்பத்திற்கு தங்களின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், சிறு வயதிலேயே இறந்து விட்டார் என்ற பதிவுகளையும் பதிவிட்டு வருகின்றனர். இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவது குறித்து விழிப்புணர்வு அதிகப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.