சினிமா

பேண்டஸி படத்தில் நடிக்கும் ஹன்சிகா - கிளாப் அடித்து ஆரம்பித்து வைத்த விஜய் சேதுபதி

பேண்டஸி படத்தில் நடிக்கும் ஹன்சிகா - கிளாப் அடித்து ஆரம்பித்து வைத்த விஜய் சேதுபதி

சங்கீதா

‘மஹா’ படத்தைத் தொடர்ந்து ஹன்சிகா மோத்வானி நடிக்கும், புதியப் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.

ஹன்சிகா மோத்வானியின் 50-வது படமான ‘மஹா’ ரிலீசுக்கு தயாராகி வருகின்றது. இந்நிலையில் ஹன்சிகா மோத்வானி லீட் ரோலில் நடிக்கும் புதியப் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. 'வாலு', 'ஸ்கெட்ச்', 'சங்கத் தமிழன்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் விஜய் சந்தர். இவர் தற்போது நடிகை ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாக உள்ளார். பிலிம் வொர்க்ஸ் நிறுவனம் என்ற பெயரில் இவர் தயாரிக்கும் அந்தப் படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடந்தது.

இந்தப் படத்தின் பூஜையில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் கே.எஸ். ரவிகுமார், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த படத்தின் முதல் காட்சியை கே.எஸ். ரவிகுமார் இயக்க, கலைப்புலி எஸ். தாணு கேமராவை இயக்க, நடிகர் விஜய் சேதுபதி கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

இந்த திரைப்படத்தில் நடிகை ஹன்சிகாவுடன் இணைந்து சந்தோஷ் பிரதாப், ஸ்ரீமன், ரெடின் கிங்ஸ்லி, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ‘கூகுள் குட்டப்பன்’ பட இயக்குநர்களான சபரி கிரீசன் மற்றும் சரவணன் இணைந்து இயக்குகிறார்கள். பேண்டஸி படமாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் வரும் பிப்ரவரி 21-ம் தேதி முதல் துவங்கவுள்ளது. குழந்தைகள் மற்றும் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் இந்தப் படத்தை உருவாக்க உள்ளதாக இயக்குநரிகளில் ஒருவரான சரவணன் தெரிவித்துள்ளார்.