லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் சமுத்திரகனி, மிஷ்கின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் "ஆர் யூ ஓகே பேபி?" படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் 'ஆரோகணம்', 'நெருங்கி வா முத்தமிடாதே', 'அம்மணி', 'ஹவுஸ் ஓனர்' ஆகிய 4 படங்களை இதுவரை அவர் இயக்கியுள்ளார். தான் இயக்கும் படங்களின் மூலம், தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தையும் வைத்திருக்கிறார்.
இந்நிலையில், தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி வரும் ஐந்தாவது படத்திற்கு "ஆர் யூ ஓகே பேபி?" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி மற்றும் அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் மிஷ்கின், முருகா அசோக், பவல் நவநீதன், ரோபோ சங்கர், வினோதினி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இதை லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ஹோம் பேனர் மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் தயாரிக்கிறது.
இது தொடர்பாக லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கூறுகையில், “ஆர் யூ ஓகே பேபி படம், என்னுடைய Talk Show நிகழ்ச்சியின் பார்வையாளர்களுக்கு நான் செய்யும் அர்ப்பணிப்பு. ஏனெனில் இப்படம், ஒரு குற்றத்தின் சமூக மற்றும் சட்ட அம்சங்களைப் பற்றிய விவாதம். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கேரளாவில் நடைபெற்று வருகிறது. படத்தின் தயாரிப்பு பணிகள் பல சவால்களுக்கு மத்தியில் நடந்தது.
மேலும், இது சொல்லப்பட வேண்டிய கதையை வைத்திருப்பதால், முரண்பாடுகளை எதிர்த்துப் போராடி முடிக்க முடிவு செய்தோம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு பெரிய பாக்கியம். அதுமட்டுமின்றி, மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா சாரின் மிடாஸ்-டச் முழு படத்திற்கும் கிடைத்த பரிசு. அவரது இசை இந்த படத்தை ஒரு பெரிய அளவிற்கு உயர்த்தும். படப்பிடிப்பை முடித்துவிட்டோம், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது" என்று கூறியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், நேற்று லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். இதையடுத்து இந்த படத்தின் டீசரை இன்று மாலை 6 மணிக்கு நடிகர் விஜய் சேதுபதி வெளியிட உள்ளதாகவும் அவர் பதிவிட்டு இருந்தார்.
அதன்படி, தற்போது ஆர் யூ ஓகே பேபி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சட்டப் போராட்டத்தை சொல்லும் வகையில் டீசர் காட்சிகள் உள்ளன. அதேபோல், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஒரு பெண் சந்திக்கும் அவமானங்கள், சிக்கல்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கூறும் கதாபாத்திரத்தில் லஷ்மி ராமகிருஷ்ணனே நடித்துள்ளதாக தெரிகிறது.
டீசரில் பின்னணி இசை ஈர்க்கும் வகையில் உள்ளன. பின்னணியில் இருக்கும் பரபரப்பை அந்த இசை கடத்துகிறது.
- சங்கரேஸ்வரி.S