சினிமா

‘பிகிலுக்கு 50 கோடி.. மாஸ்டருக்கு 80 கோடி’: ஐடி விசாரணையில் வெளியான விஜய் சம்பளம்

‘பிகிலுக்கு 50 கோடி.. மாஸ்டருக்கு 80 கோடி’: ஐடி விசாரணையில் வெளியான விஜய் சம்பளம்

rajakannan

பிகில் மற்றும் மாஸ்டர் படங்களுக்கு நடிகர் விஜய் பெற்ற சம்பளம் தொடர்பான தகவல் ஐடி விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

பிகில் பட விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனம், பைனான்சியர் அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் 4 நாட்கள் சோதனை நடத்தினர். அப்போது அன்புச்செழியன் விடு, அலுவலகங்களிலிருந்து 77 கோடி ரூபாய் பணம், 1.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் விஜய் வீட்டில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது.

இதையடுத்து நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி, பைனான்சியர் அன்புசெழியனுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி அவர்கள் விசாரணைக்கு ஆஜராகினர். விஜய் சார்பில் அவரது ஆடிட்டர் விசாரணைக்கு ஆஜரானார்.

இதைத்தொடர்ந்து சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலணியில் உள்ள மாஸ்டர் படத்தின் இணைத்தயாரிப்பாளர் லலித் குமார் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு ஐ.டி. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதனையடுத்து, சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் மீண்டும் ஐ.டி அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்டு மீண்டும் ஆய்வு நடத்தப்பட்டு கூறப்பட்டது.

இந்நிலையில், பிகில் மற்றும் மாஸ்டர் படங்களுக்கு நடிகர் விஜய் பெற்ற சம்பளம் தொடர்பான தகவல் ஐடி விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. பிகில் படத்திற்கு ரூ.50 கோடி, மாஸ்டர் திரைப்படத்திற்கு ரூ.80 கோடியை விஜய் சம்பளமாக பெற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளனர்.