சினிமா

நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை திடீர் விசாரணை - பின்னணி என்ன?

நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை திடீர் விசாரணை - பின்னணி என்ன?

webteam

மூன்றாவது முறையாக நடிகர் விஜய் - அட்லீ கூட்டணியில் உருவான திரைப்படம் பிகில். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. கடந்த தீபாவளிக்கு வெளியான இப்படம் நல்ல வசூல் சாதனை படைத்தது.

படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூலைக் குவித்திருப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் படத்தின் வசூல் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 20 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் பிகில் படத்தை தயாரிக்க ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய பைனான்சியர் அன்புச்செழியனின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.

பிகில் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நெய்வேலியில் நடைபெற்று வருகிறது. பிகில் படம் குறித்து அதன் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தி வரும் வருமான வரித்துறையினர், தற்போது நெய்வேலி படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடமும் விசாரணை நடத்தினர். விஜயை நேரில் சந்தித்த வருமான வரித்துறையினர் அவருக்கு சம்மன் அளித்து விசாரணையை தொடங்கினர்.

அப்போது பிகில் படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு? எதன் அடிப்படையில் அவ்வளவு சம்பளம்? என்பது குறித்தெல்லாம் அதிகாரிகள் கேள்விகள் எழுப்பியதாக தெரிகிறது. இதற்கு பதிலளித்த விஜய்யை அங்கிருந்து அவரது காரிலேயே வருமான வரித்துறையினர் அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு நடைபெற்று வந்த மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

திடீரென விஜய்யிடம் வருமானவரித்துறையினர் விசாரணை நடத்துவதற்கு காரணம், அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட தகவல்களே என சொல்லப்படுகிறது. படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, படம் வெளியான 50வது நாளில் தனது ட்விட்டர் பக்கத்தில், 50 நாட்களைக் கடந்து உலக அளவில் இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த திரைப்படமாக பிகில் உள்ளது என பதிவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து, 100 வது நாளில் அர்ச்சனா கல்பாத்தி அவரது ட்விட்டர் பக்கத்தில், “இந்த ஆண்டின் அதிக வசூல், அதிக ட்ரெண்டிங் மற்றும் சாதனை படைத்த தமிழ் திரைப்படம் பிகில்” என பதிவிட்டிருந்தார். மேலும் விஜய்க்கு அளித்த சம்பளம் குறித்தும் அவர் தகவல் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே விஜயிடம் வருமானவரித்துறை விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதேபோல் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான புலி திரைப்படத்தின் வசூல் சாதனை குறித்தும் அப்போது பெரிதாக பேசப்பட்டது. அப்போதும் வருமானவரித்துறை நடிகர் விஜய் வீட்டில் சோதனை நடத்தியது. அதைத் தொடர்ந்து, விஜய் கடந்த 5 வருடங்களாக வரி ஏய்ப்பு செய்ததாக அப்போதைக்கு செய்திகள் வெளியாகின. விசாரணைக்கு பிறகு வரி ஏய்ப்பு எதுவும் செய்யப்படவில்லை என வருமான வரித்துறையினர் தரப்பிலேயே தெரிவிக்கப்பட்டது.