சினிமா

'சம்பவங்கள்' பல... விஜய் வாக்களிக்க சைக்கிளில் வந்த நிகழ்வு உணர்த்துவது என்ன?

'சம்பவங்கள்' பல... விஜய் வாக்களிக்க சைக்கிளில் வந்த நிகழ்வு உணர்த்துவது என்ன?

webteam

காவல்துறையினரின் வாக்கி டாக்கி காணாமல் போய், பின்னர் கண்டறியப்பட்டது, ஒரு பெண்ணின் செல்போன் திருடப்பட்டது என பல சம்பவங்களை உள்ளடக்கிய நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்த சம்பவம் சில பல கேள்விகளையும் எழுப்புகிறது.

அரசியல் கட்சி தலைவர்களைத் தாண்டி சினிமா பிரபலங்கள் வாக்கு செலுத்துவது ரசிகர்களால், ஊடகங்களா, சமூக வலைதளங்களால் எப்போதும் கவனிக்கப்படும். நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியிடன் வந்து திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். அதேபோல ரஜினி, சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் ஆகிய நடிகர்களும் வாக்களித்தனர்.

பொதுவாக, தேர்தல் வாக்குப்பதிவு நாளின்போது நடிகர் விஜய் வாக்களிக்க வருவதை பார்க்கவே அவரின் ரசிகர்கள் வாக்குச்சாவடியை சுற்றி அதிக அளவில் கூடுவது வழக்கம். நடிகர் விஜய்யின் பெயர் நீலாங்கரை கபாளீஸ்வரர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குசாவடியை உள்ளதால் இன்று காலை 7 மணி முதலே விஜய் ரசிகர்கள் அங்கு கூட தொடங்கினர். காவல்துறையினரும் வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாதவர்களை அந்த இடத்தில் இருந்து வெளியே அனுப்பி வந்தனர்.

8 மணிக்கு மேல் வாக்களிக்க வருவார் என்கிற தகவல் மட்டும் விஜய் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டது. ஆனால், 8 மணியிலிருந்தே விஜய் ரசிகர்கள் அவர் வீட்டை சுற்றி கூட தொடங்கினர்.

காலை 7 மணி முதல் வழிகாட்டுதல் நெறிமுறையின்படி வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. காலை 9:10-க்கு சரியாக நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள விஜய் வீட்டின் கதவு திறக்கப்பட்டது. உள்ளே இருந்து வேகமாக சைக்கிளில் வந்த விஜய் வாக்குசாவடியை நோக்கி வேகமாக சென்றார். எதிர்பாராமல் காத்திருந்த ரசிகர்களும், விஜய்யோடு வாக்குச்சாவடி மையத்திற்கு சென்றனர்.

ஏற்கெனவே வாக்குச்சாவடி மையத்தில் இருந்த ரசிகர்களும் விஜய் சைக்கிளில் வருவதைப் பார்த்து உற்சாகத்தில் சத்தம் போட்டனர். விஜய் வந்தவுடன் வாக்குச்சாவடியை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள், மீடியாக்கள் திரண்டனர். அதுவரை எந்த சலசலப்பும் இன்றி அமைதியாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு, விஜய்யின் வருகைக்கு பிறகு பரபரப்பானது. அதுவும் தனியார் பள்ளி நுழைவு வாயிலில் இருந்து வாக்கு செலுத்தும் அறைக்கு செல்லவே ஐந்து நிமிடங்கள் ஆனது.

அதன் பின்னர் விஜய் நேரடியாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார். பின்னர் வாக்குச்சாவடியை விட்டு வெளியே வரவே 5 நிமிடங்கள் ஆனது. பின்னர் வெளியே வந்த விஜய்யுடன் பலர் செல்பி எடுக்க முயன்றனர். சூழ்ந்திருந்த கூட்டத்திற்கு நடுவே, வேகமாக சென்ற விஜய் தனது கார் ஓட்டுநர் ஓட்டி வந்திருந்த இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து வாக்குச்சாவடியிலிருந்து புறப்பட்டு வீட்டிற்கு சென்றார்.
விஜய் வாக்கு செலுத்த வந்த கால் மணி நேரத்தில் வாக்குச்சாவடியில் அசாதாரண நிலை நிலவியது. மூத்த வாக்காளர்கள் பலர் முணுமுணுத்தனர். ஒரே கூச்சல், விசில் சத்தம் நிலவியதால் வாக்குச்சாவடியின் நிசப்த்தமற்ற சூழல் நிலவியது. 251 முதல் 259 வரையிலான பூத் எண்கள் கொண்ட வாக்கு மையத்தில் விஜய் வாக்கு செலுத்திய 251-வது பூத்தில் கால் மணி நேரம் மற்ற வாக்காளர்கள் வாக்கு செலுத்த முடியவில்லை.

அதேபோல கூட்ட நெரிசலால் அருகில் இருந்த இரு சக்கர வாகனங்கள் சரிந்தன. காவல்துறையினரின் வாக்கி டாக்கி காணாமல் போய், பின்னர் கண்டறியப்பட்டது. கூட்டத்தில் இருந்த ஒரு பெண்ணின் செல்போன் திருடப்பட்டது. அதற்கும் மேல் கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்தப்பட்டது.

வாக்குச் சாவடியில் 6 காவலர்கள் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் ஏதும் காவலர்கள் அமைக்கவில்லை. வாக்குச்சாவடி வளாகத்திற்குள் தேர்தல் ஆவண அட்டை இல்லாதவர்களை தீவிரமாக கண்காணிக்கவில்லை.

இந்த காரணங்களால் நடிகர் விஜய் வாக்களிக்கும் மையம் சில நேரம் பரபரப்புடன் இருந்தது. அதை விட விஜய் ஏன் சைக்கிளில் வந்தார், ஏன் இந்த தேர்தலில் மட்டும் சைக்கிளில் வர வேண்டும் என பலரும் விவாதித்தனர்.

சாமானியரில் ஒருவராக இப்படிச் செய்தார், எளிமையை வெளிப்படுத்தவே இப்படிச் செய்தார், கவனத்தை ஈர்க்கவே இப்படிச் செய்தார் என பல்வேறு விதமாக விவாதப்பொருள் ஆனது, விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்த நிகழ்வு.

இதனிடையே, பெட்ரோல் விலை உயர்வை குறிக்கும் வகையில்தான் விஜய் சைக்கிளில் வந்திருப்பார் என்று திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், உண்மையான காரணம் குறித்து நடிகர் விஜய்யின் பி.ஆர்.ஓ ரியாஸ் கூறும்போது, "விஜய் சைக்கிளில் வந்த காரணம், அவர் வீட்டுக்கு அருகில் பூத் இருந்ததும், சின்ன சந்து என்பதால் காரை நிறுத்த முடியாது என்பதும் மட்டுமே" என்றார்.

வாக்களிக்கும் நேரத்தில் விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்கள் உரிய முன்யோசனையுடன் செயல்பட வேண்டும் என்பதும், அவர்போன்ற நட்சத்திரங்கள் வாக்கு செலுத்த வரும் வாக்குச்சாவடிகளில் உரிய நெறிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்பது கவனத்துக்குரியது.

- ந.பால வெற்றிவேல்