போனி கபூர் - உதயநிதி ஸ்டாலின் இணையும் படத்திற்கு ‘நெஞ்சுக்கு நீதி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
அனுபவ் சின்ஹா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த 'ஆர்டிகிள் 15' தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். ’பிக்பாஸ்’ ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி ராஜசேகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்படுவதும், அதனை விசாரிக்கும் அதிகாரிக்கு, சாதிய உணர்வுகொண்ட காவலர்களாலேயே சாதியின் பெயரால் தடங்கல்கள் வருவதும், அதனை அந்த அதிகாரி முறியடித்து நடவடிக்கை எடுப்பதுமே ’ஆர்ட்டிகிள் 15’ கதை. தற்போது உதயநிதி நடிப்பில் தமிழில் ரீமேக் செய்யப்படுவதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், இப்படத்தின் தலைப்பும் மோஷன் போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. ‘நெஞ்சுக்கு நீதி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். கலைஞர் எழுதிய சுயசரிதை நூல்‘நெஞ்சுக்கு நீதி’. உதயநிதி நடிக்கும் இந்தக் கதைக்கும் தலைப்பு பொருத்தமாக இருப்பதால் ‘நெஞ்சுக்கு நீதி’என்ற தலைப்பையே வைத்துள்ளனர். மோஷன் போஸ்டரில் சிறுமிகள் இருவர் தூக்கில் தொங்க ‘சாதி சாதி சாதி’ பாடல் பின்னணியில் ஒலித்து கொடூரத்தை உணர்த்துகிறது. ’நீல’ வண்ணத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை குறியீடுகளாய் காட்டப்படுகிறது. சிறுமிகளுக்கு நீதி பெற்றுத்தரும் காவலராய் போலீஸ் கெட்டப்பில் மிரட்டுலுடன் கவனத்தை ஈர்க்கிறார் உதயநிதி.