சினிமா

"அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும்'' - சாத்தான்குளம் விவகாரத்தில் சூர்யா கருத்து!!

"அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும்'' - சாத்தான்குளம் விவகாரத்தில் சூர்யா கருத்து!!

webteam

போலீசாரின் ’லாக்கப் அத்துமீறல்கள்’ காவல்துறையின் மாண்பை குறைக்கும் செயல் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்

பொது முடக்கத்தை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் கடந்த 19ஆம் தேதி காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்களை கைது செய்தது போலீஸ். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள், திடீரென அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

விசாரணைக் கைதிகள் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக் கைதிகள் உயிரிழப்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கிரிக்கெட் வீரர்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போலீசாரின் லாக்கப் அத்துமீறல்கள் காவல்துறையின் மாண்பை குறைக்கும் செயல் என நடிகர் சூர்யா கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவிற்கு நிகழ்ந்த போலீசாரின் லாக்கப் அத்துமீறல்கள் காவல்துறையின் மாண்பை குறைக்கும் செயல். இது ஏதோ ஒரு இடத்தில் தவறி நடந்த சம்பவம் என்று கடந்து செல்ல முடியாது. தங்கள் மரணத்தின் மூலம் தந்தை, மகன் இருவரும் இந்த சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளனர். கொடூரமான மரணத்தில் கடமை தவறிய அனைவரும் நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். குற்றம் இழைத்தவர்களும், அதற்கு துணை போனவர்களும் விரைவாக தண்டிக்கப்பட்டு நீதி நிலைநிறுத்தப்படும் என்று பொதுமக்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.