சினிமா

சூர்யாவின் ’காப்பான்’ படத்துக்கு கேரளாவில் சிக்கல்

சூர்யாவின் ’காப்பான்’ படத்துக்கு கேரளாவில் சிக்கல்

webteam

சூர்யா நடித்துள்ள ’காப்பான்’ படத்தை கேரளாவில் ரிலீஸ் செய்வதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ள படம் ’காப்பான்’. இதில் தேசிய கமாண்டோ படை அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இதில், மோகன்லால் பிரதமராக நடிக்கிறார். இந்தப் படம் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. பிரபாஸின் ’சாஹோ’ அன்று ரிலீஸ் ஆவதால் செப்டம்பர் 20 ஆம் தேதிக்கு இதன் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர்.

இதற்கிடையே, ஜான் சார்லஸ் என்பவர் ’காப்பான்’ கதை தன்னுடையது என்று உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள் ளார். இவர் தொடர்ந்துள்ள வழக்கு மீது செப்டம்பர் 4ஆம் தேதி விளக்கமளிக்க, தயாரிப்பு நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தை கேரளாவில் வெளியிடுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ’2.0’ படத்தை கேரளாவில் விநியோகம் செய்தவர் டோமிசன் முளகுபாடம். இவர் ’புலிமுருகன்’ படத்தின் தயாரிப்பாளர். 

கேரளாவில் ’2.0’ படம் ரூ.9 கோடி நஷ்டத்தை சந்தித்ததாகவும் அதை ஈடுகட்ட லைகா தயாரித்துள்ள ’காப்பான்’ படத்தின் கேரள விநியோக உரிமையை குறைந்த விலைக்கு தனக்குத் தருவதுதான் முறை என்றும் ஆனால் வேறு ஒருவருக்கு உரிமையை கொடுத்துள்ளதாகவும் டோமிசன், கேரள விநியோகஸ்தர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, நஷ்டத்தை ஈடுகட்ட டோமிசனுக்கு அந்தப் படத்தின் கேரள உரிமையை வழங்க வேண்டும் என்றும் இல்லை யென்றால் கேரளாவில் காப்பான் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்றும் கேரள விநியோகஸ்தர்கள் சங்கம் லைக்கா நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.   

இதனால் அந்தப் படத்தின் கேரள ரிலீஸுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.