ஊரடங்கு முடிந்ததும் தனது 'மிருகா' திரைப்படம் திரைக்கும் வரும் என்று நடிகர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
கடந்த 2000 ஆண்டு வெளியான ‘ரோஜாக்கூட்டம்’ படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். அதன் பின் ‘பார்த்திபன் கனவு’, ‘கனா கண்டேன்’ போன்ற பல படங்களில் நடித்தார். மேலும் தமிழ்த் தவிர தெலுங்கு, மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்தார். இவர் ‘மிருகா’ படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். ஊரடங்கு உத்தரவால் திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளதால் பல படங்கள் வெளியாகாமல் முடங்கிப் போய் உள்ளன.
இந்நிலையில் 'மிருகா' படத்தின் வெளியீடு குறித்தும் தான் நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் குறித்தும் நடிகர் ஸ்ரீகாந்த் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். தனது வருங்கால திட்டங்கள் குறித்து பேசிய ஸ்ரீகாந்த், “மிருகா படத்தின் படப்பிடிப்பு 144 தடை உத்தரவு போடும் முன்பே முடிந்துவிட்டது. தற்போது, அனைத்து பணிகளும் முடிந்து வெளியாகத் தயாராகவுள்ளது. ஊரடங்கு முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியதும், திரையரங்குகள் திறக்கப்படும். அப்போது வெளியாகும் முதல் படமாக 'மிருகா' இருக்கும்.இதில் ராய் லட்சுமி நாயகியாக நடிக்கிறார்.
மேலும், 'மிருகா' படத்திற்குப் பிறகு நானும், ஹன்சிகா மோத்வானியும் இணைந்து நடிக்கும் 'மஹா' படத்தில் நடிகர் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். கருணாகரன், தம்பி ராமையா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படம் துப்பறியும் திரில்லர் படமாக உருவாகி வருகிறது. பாதி படம் முடிந்து விட்டது.
அதேபோல், நானும், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் இணைந்து நடிக்கும் படம் 'காக்கி'. இப்படத்தில் இரு கதாநாயகிகள். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இந்துஜாவும், எனக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகையும் நடிக்கிறார்கள். ஆனால், அவர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பும் கொரோனா ஊரடங்கால் பாதியிலேயே நிற்கிறது.
'காக்கி' படத்தை 'வாய்மை'யை இயக்கிய செந்தில் குமார் இயக்குகிறார். மேலும், இப்படம் சமுதாய சிந்தனையைக் கொடுக்கும் படமாக இருக்கும். எனக்கும், விஜய் ஆண்டனிக்கும் சரிசமமான பாத்திரங்கள் இருக்கிறது. மிகவும் உணர்வுப்பூர்வமான படமாக இருக்கும். அடுத்து, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். இதுவும் பாதியில் நிற்கிறது” என்றார்.