சினிமா

“பாலாபிஷேகம் வேண்டாம், அம்மாவுக்கு புடவை போதும்” - சிம்பு உருக்கம்

“பாலாபிஷேகம் வேண்டாம், அம்மாவுக்கு புடவை போதும்” - சிம்பு உருக்கம்

rajakannan

தனது திரைப்படம் வெளியாகும் போது கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் எதுவும் செய்யவேண்டாம், தாய் தந்தையருக்கு புடவை, சட்டை எடுத்துக் கொடுத்தால் போதும் என்று நடிகர் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘செக்கச்சிவந்த வானம்’ திரைப்படத்தை தொடர்ந்து ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். சுந்தர் சி இயக்கியுள்ள இந்தப் படத்தில் கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, ரோபோ ஷங்கர், மகத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளி நாளன்று வெளியிடப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தத் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமென அறிவிக்கப்பட்டது. பொங்கலுக்கு ரஜினியின் ‘பேட்ட’,அஜித்தின் ‘விஸ்வாசம்’ படங்கள் வெளியானதால் தள்ளிப் போனது. இதனையடுத்து, பிப்ரவரி1ம் தேதி ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் வெளியாகும் என அண்மையில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், நடிகர் சிம்பு தன்னுடைய ரசிகர்களுக்கு பொங்கல், புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளதோடு, உருக்கமான வேண்டுகோள் ஒன்றினையும் விடுத்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “பொதுவாக நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் போது, சில இடங்களில் பிளாக்கில் அதிக விலைக்கு டிக்கெட்கள் விற்கிறார்கள். அப்படி அவர்களிடம் அதிக விலைக்கு டிக்கெட் வாங்க வேண்டிய அவசியம் ரசிகர்களுக்கு இல்லை. முறையான கட்டணத்தை தியேட்டர் கவுண்டரில் செலுத்தி படம் பார்க்க வேண்டும். 

உங்கள் அன்பை வெளிப்படுத்துவதற்காக பிலெக்ஸ், பேனர், கட் அவுட் வைக்கிறீர்கள். இந்த முறை உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். உங்கள் அப்பா, அம்மாதான் எல்லாம். அதன் பிறகுதான் நான். உங்கள் அன்பு எனக்கு புரியும். இந்த முறை பேனர், பாலாபிஷேகத்திற்கு பதிலாக அம்மாவுக்கு ஒரு புடவை, அப்பாவுக்கு ஒரு சட்டை, தம்பி, தங்கைகளுக்கு சாக்லெட் என ஏதோ ஒன்று வாங்கி தாருங்கள். 

அப்படி உங்கள் அம்மாவிற்கு புடவை எடுத்துக் கொடுத்த போட்டோ அல்லது வீடியோவை நீங்கள் பதிவிட்டால் அதனைவிட எனக்கு வேறு சந்தோஷம் எதுவும் இல்லை. பேனர், கட்-அவுட் வைத்து கெத்து காட்டுவது முக்கியம் கிடையாது. நான் படத்தில் நடித்து உங்கள் பெயரை காப்பாற்ற வேண்டும். அதனை நான் செய்கிறேன். எனக்காக நீங்கள் இதனை செய்யுங்கள். இதனை ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்” என்று உருக்கமாக சிம்பு கூறியுள்ளார்.