ஷாருக் கான் x
சினிமா

’அன்று ஒரு நாளில் 100 சிகரெட்.. இன்று சிகரெட்டுக்கு குட்பை..’ Fans உடன் ஷாருக் பகிர்ந்த சர்ப்ரைஸ்!

நடிகர் ஷாருக் கான் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டதாக கூறி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார்.

Rishan Vengai

நவம்பர் 2-ம் தேதி தனது 59வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ஷாருக் கான், தன்னுடைய ரசிகர்களை சந்திக்கும் ஷாருக்டே என்ற நிகழ்ச்சியில் புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டதாக கூறி எல்லோரையும் மகிழ்ச்சியில் தள்ளியுள்ளார். அவருடைய இந்த அறிவிப்பானது அவருடைய ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஷாருக் கான்

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாளைக்கு 100 சிகரெட் பிடிப்பதாக அறிவித்திருந்த ஷாருக் கான், அதன் விளைவை அனுபவித்ததாகவும், தற்போதும் அனுபவித்து வருவதாகவும், விரைவில் முழுமையாக மீண்டுவிடுவேன் என்றும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஷாருக் கானின் பல ரசிகர்களின் அவரின் இந்த அறிவிப்பை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

சுவாசிக்க சிரமப்பட்டேன்..

பாலிவுட் திரைத்துறையின் சூப்பர் ஸ்டாராக வலம்வரும் ஷாருக்கான், நவம்பர் 2 அன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ரசிகர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது ரசிகர்களிடம் பேசிய ஷாருக் கான், ஒரு நல்ல செய்தி இருப்பதாக கூறி புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டதாக அறிவித்தார். தனது புகைப்பிடிக்கும் பழக்கத்தை நீண்ட காலமாக வெளிப்படுத்திய பல ரசிகர்கள் பின்தொடரும் ஒருநடிகர், புகைப்பிடிப்பதை நிறுத்தியிருப்பதாக கூறியுள்ளது பெரும்பாலானோரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ஷாருக் கான்

அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் பேசிய ஷாருக் கான், “ஒரு நல்ல விஷயம் இருக்கிறது, நான் இனி புகைபிடிப்பதில்லை, நண்பர்களே” என்று உற்சாகமான கூட்டத்துடன் செய்தியைப் பகிர்ந்து கொண்டார். மேலும் “புகைபிடிப்பதைக் கைவிட்ட பிறகு மூச்சுத்திணறல் குறைவாக இருக்கும், மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்படாது என்று நினைத்தேன், ஆனால் அந்த உணர்வு இன்னும் இருக்கிறது. கடவுள் அருளால் அதுவும் சரியாகிவிடும்” என்று தெரிவித்தார்.

இதற்கு முன்பு கடந்த 2011-ம் ஆண்டு இந்தியா டுடேக்கு அளித்த நேர்காணலில் பேசியிருந்த ஷாருக் கான், "நான் ஒரு நாளைக்கு 100 சிகரெட்டுகள் புகைப்பேன். சாப்பிட மறந்து விடுகிறேன். தண்ணீர் கூட குடிப்பதில்லை. என்னிடம் சுமார் 30 ப்ளாக் காபி கப் இருக்கிறது, ஒரு சிக்ஸ் பேக் வைத்திருக்கிறேன். நான் எவ்வளவு குறைவாக என்னைக் கவனித்துக்கொள்கிறேனோ, அதைவிட அதிகமாக மீண்டும் கவனித்துகொள்ளவேண்டியது இருக்கிறது” என்று நகைச்சுவையாக கூறியிருந்தார்.

தற்போது புகைப்பிடிப்பதை கைவிட்டுவிட்டதாக ஷாருக் கான் தெரிவித்திருப்பது கண்டு பல ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகின்றனர். ஷாருக்கான் தனது அடுத்த அதிரடி திரில்லர் படமான கிங்கிற்கு தயாராகி வருகிறார், இப்படத்தில் சுஹானா கானும் நடிக்கிறார், அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்கிறார்.