சினிமா

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா உறுதி - தனிமைப்படுத்திக் கொண்டதாக ட்விட்டரில் பதிவு

சங்கீதா

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 3-வது அலையின் காரணமாக அதிகரித்து வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது சற்று குறைந்து வருகிறது. 3 லட்சத்திற்கும் அதிகமாக தொற்று பதிவாகி வந்தநிலையில், தற்போது தினசரி பாதிப்பு 2 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும், திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், வடிவேலு, சத்யராஜ், விக்ரம், அர்ஜூன், மகேஷ் பாபு, சிரஞ்சீவி, நடிகைகள் குஷ்பு, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, கஜோல், ஜான்வி கபூர், இயக்குநர்கள் சுராஜ், பாராதிராஜா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமாகியுள்ளனர்.

இந்நிலையில், நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது, “எனது உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் எனது கட்சியைச் சேர்ந்த சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும் மாலை வணக்கம். இன்று மாலை எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் என்னை நான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். கடந்த வாரத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.