நடிகர் ஆர்.கே சுரேஷின் ‘விசித்திரன்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
ஆர்.கே சுரேஷ் நடிப்பில் கடந்த மே 6 ஆம் தேதி வெளியான ‘விசித்திரன்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆர்.கே சுரேஷுடன் பூர்ணா, மது ஷாலினி, இளவரசு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மலையாளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ’ஜோசப்’ படத்தின் ரீமேக்தான் ‘விசித்திரன்’.
தன்னிடமிருந்து பிரிந்து சென்ற தனது முன்னாள் மனைவி விபத்தில் இறந்துவிட, 'அது விபத்தல்ல திட்டமிட்டக் கொலை' என்பதை கண்டுபிடிக்கும் மிரட்டலான ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் மிரட்டியிருப்பார். மலையாளத்தில் பாராட்டுகளும் வெற்றியையும் குவித்த இந்தக் க்ரைம் த்ரில்லர் படத்தை இயக்கிய எம்.பத்மகுமாரே தமிழிலும் 'விசித்திரன்' படத்தை இயக்கி இருக்கிறார். ஜோஜு ஜார்ஜ் கதாபாத்திரத்தில் ஆர்.கே சுரேஷ் நடித்துள்ளார்.
இயக்குநர் பாலா தயாரித்திருந்த ’விசித்திரன்’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் ஓடிடி தளம் கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில், ‘விசித்திரன்’ வெளியாகி 21 நாட்கள் கழித்து இன்று அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. ஆனால், இலவசமாக அல்ல. ரூ.129 ரூபாய் கட்டணம் செலுத்தி பார்க்கும் விதமாக வெளியாகியுள்ளது. ஒரு வாரம் கழித்துதான் இலவசமாக பார்க்கலாம். இதேபோல்தான், ‘கேஜிஎஃப் 2’ படமும் கட்டணம் செலுத்தி பார்க்கும்படியாக வெளியானது. தற்போது ஒருவாரம் கழித்து நாளை முதல் ‘கேஜிஎஃப் 2’ வை இலவசமாக அமேசான் பிரைமில் பார்க்கலாம்.