சினிமா

`1,000 கோடி கொடுத்தாலும் தாறுமாறான படங்களில் நடிக்கும் தரம் தாழ்ந்தவனில்லை நான்’- ராமராஜன்

`1,000 கோடி கொடுத்தாலும் தாறுமாறான படங்களில் நடிக்கும் தரம் தாழ்ந்தவனில்லை நான்’- ராமராஜன்

webteam

ராகேஷ் இயக்கத்தில் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கும் 'சாமானியன்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ராமராஜன் நாயகனாக கம்பேக் கொடுக்க இருக்கும் இந்தப் படம் ராமராஜன் நடிக்கும் 45வது படமாக உருவாகிறது.

இந்த நிகழ்வில் நடிகர் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், நடிகை நக்ஷா சரண், இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி, கதாசிரியர் கார்த்தி, இயக்குநர் ராகேஷ், தயாரிப்பாளர் மதியழகன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ராதாரவி பேசுகையில், “இந்தப் படம் பெரிய வெற்றிபெறும், இயக்குநர் ராகேஷூக்காகவும், நடிகர் ராமராஜனுக்காகவும். இப்போதும் மதுரைப் பக்கம், இராஜபளையம் பக்கம் போகும் போது ராமராஜன் ரசிகர் மன்றம் என்ற பலகைகளைப் பார்ப்பேன். அப்போதெல்லாம், இவனுக்கு அழிவே கிடையாது என நினைத்துக் கொள்வேன். திரும்ப ஒரு ரவுண்டு இவர் வரவேண்டும்.

தெலுங்கு சினிமாவில் நூதன் பிரசாந்த் என்று ஒரு நடிகர் இருந்தார். தமிழில் வெளியான பாட்டி சொல்லைத் தட்டாதே படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்த போது, ஒரு விபத்தாகி கால்கள் இரண்டையும் இழந்தார். ஆனால் தெலுங்கு சினிமாக்காரர்கள் ஜட்ஜ் வேடம், காரில் அமர்ந்தபடியே பேசும் வேடம், வீல் சேரில் உட்கார்ந்து நடிக்கும் வேடம் என சாகும் வரை அவர் நடிக்க வேடங்களைக் கொடுத்தார்கள். தெலுங்கு சினிமா அப்படி என்றால், தமிழ்சினிமா ஒரு நல்ல நடிகனை மறக்காமல் வைத்திருந்து மீண்டும் நடிக்க அழைத்து வந்திருக்கிறது இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் திரையரங்கு வந்து பார்க்கும் ஆடியன்ஸ் குறைந்துவிட்டார்கள். அது அதிகமாக வேண்டும்.

ஆந்திரா, தெலுங்கானாவில் எல்லாம் பாருங்கள்... அவர்கள் அப்படி கூட்டம் கூட்டமாக வந்து பார்க்கிறார்கள். ஆனால் இங்கோ 'விலைவாசி ஏறிடுச்சு' என்கிறார்கள். விலை வாசி ஏறிவிட்டது என்றால் வந்து டிக்கெட்டை மட்டும் வாங்குங்கள். ஏன் பாப்கார்ன், கூல் ட்ரிங்க் எல்லாம் வாங்குகிறீர்கள். ரெண்டு பேர் வந்தால் ஒன்றை வாங்கி பகிர்ந்து கொள்ளுங்கள். திரையரங்கில் வந்து படம் பார்க்கும் வழக்கத்தை ரசிகர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்"

இயக்குநர் ராகேஷ் பேசுகையில், "இந்த வாய்ப்பைக் கொடுத்த தயாரிப்பாளர், ராமராஜன் சார் எல்லோருக்கும் நன்றி. எல்லோரும் ஏன் ராமராஜனை நடிக்க வைக்கிறீர்கள் என்று கேட்டார்கள். எனக்கு விஜயகாந்த், ராமராஜன் இருவரையும் பிடிக்கும். இவர்கள் இருவரும் திரும்ப நடிக்க வேண்டும் எனத் தோன்றும். விஜயகாந்த் சாருடன் பணிபுரிய வாய்ப்பு அமையவில்லை என்றாலும், ராமராஜன் சாருடன் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம்.

இந்த சாமானியன் ஒரு காமன்மேன் இல்லை. அவன் கையில் எடுக்கும் ஒரு ரிவென்ஞ் ஏன் என்பது அழுத்தமாக இருக்கும். இதில் ராமராஜன் நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என நினைத்தேன். அவரிடம் கதை சொன்ன போது சில திருத்தங்கள் மட்டும் சொன்னார். முதலில் இந்தக் கதையில் ராமராஜன் நடிக்க வைக்கலாம் என்ற யோசனை சொன்ன தயாரிப்பாளருக்கு நன்றி. அதிலிருந்து 24 மணி நேரத்தில் ராமராஜன் சாரை சந்தித்து படம் தொடங்கிவிட்டது. இந்தப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் சார் பாடலாசிரியராக அறிமுகம் ஆகிறார். அவருடைய பிஸியான பணிகளுக்கு நடுவே பாடலை எழுதிக் கொடுத்திருக்கிறார்."

இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி "ராமராஜன் சார் படங்களில் பாட்டு எப்போதும் ஹிட் ஆகும். இந்தப் படத்தின் பாடல்களும் ஹிட் ஆகும். என் மியூசிக் பேசும்" என்றார்.

நந்தா பெரியசாமி "முதல்ல இந்தப் பட டைட்டில், ஆர்டிஸ்ட் எல்லாம் வேறு. பிறகு யோசித்து முடிவானது தான் இப்போது அமைந்திருக்கும் கூட்டணி. இந்த விழாவில் ராமராஜன் சார் பற்றிய ஒரு காணொளி திரையிடுவதற்காக பல தகவல்களைத் திரட்டினேன். அதில் தெரிந்து கொண்ட பல தகவல்கள் ஆச்சர்யமாக இருந்தது. இதே கிருஷ்ணவேனி தியேட்டரில் கராகாட்டக்காரன் 300 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கிறது.

எல்லோரும் இந்தப் படம் பற்றி தெரிந்ததும், ஏன் ராமராஜன் நடிக்க வருகிறார் எனக் கேட்கிறார்கள், மீம்ஸ் போடுகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான். அமிதாப் பச்சன் எல்லாம் இன்னும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். அதே போல ராமராஜனும் இவ்வளவு வருடங்கள் காத்திருந்து நடித்தால் ஹீரோ என்ற உறுதியுடன் திரும்ப வந்திருக்கிறார். இந்தப் படத்தில் வாழ்க்கைக்கு தேவையான கருத்தும் இருக்கிறது."

ராமராஜன் பேசுகையில், "ராதாரவி அண்ணனுடன் இது எனது 4வது படம். எம்.எஸ்.பாஸ்கர் நான் உதவி இயக்குநராக இருந்த காலத்தில் இருந்தே பழக்கம் அவர்கள் இருவருடனும் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பொருத்த வரை இதில் ஹீரோ கதையும் திரைக்கதையும் தான், இரண்டாவது ஹீரோ படத்தின் டைட்டில். இந்தப் படத்தில் நாயகியாக நக்ஷா சரண் நடித்திருக்கிறார். ஆனால் அவர் எனக்கு ஜோடி இல்லை. ஆனாலும் அதை எல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. காரணம் படத்தின் கதை. இந்தப் படத்தின் மூன்றாவது ஹீரோ இந்தக் கதைக்கு நான் நடிக்கணும் என வந்த, தயாரிப்பாளரும், இயக்குநரும்.

இந்த கிருஷ்ணவேணி தியேட்டரில் நிகழ்ச்சி நடப்பது சந்தோசமாக இருக்கிறது. நான் நடித்த கரகாட்டக்காரன் ரிலீஸ் நாட்கள் நினைவுக்கு வருகிறது. இந்த மாதிரி ஒரு நிகழ்வு நடக்கிறது என நேற்றிரவு ஒரு ஃபோன்தான் செய்தேன். உடனடியாக என் ரசிகர் மன்ற நண்பர்கள் இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்தும் இன்று வரை அவர்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். நான் படம் நடிக்க வேண்டும் என தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்பார்கள். நடிக்க ஆரம்பித்து இருவது படங்கள் தொடர்ந்து ஹிட் கொடுக்க காரணம், ரசிகர்கள் தான்.

நான் சாதாரணமாக சினிமாவுக்கு வந்துவிடவில்லை. ஐந்து வருடங்கள் தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் வேலையில் இருந்து பலவும் செய்தேன். பிறகு மெட்ராஸ் வந்து இரண்டு வருடம் போராடி உதவி இயக்குநராக சேர்ந்தேன். பல படங்களில் பணியாற்றி தான் பிறகு ஹீரோவானேன்.

என்னுடைய ரசிகர்கள் படத்தின் டீசரைப் பார்த்ததும் நினைக்கலாம், 'சாமானியன்'னு டைட்டில் வெச்சுட்டு துப்பாக்கி எல்லாம் வைத்திருக்கிறேன் என்று. வயல்காட்டிலும், கிராமத்திலும் நடித்த ஒருவன் கையில் துப்பாக்கி ஏன் என்று. ஆனால் இப்படியான ஒரு ராமராஜனை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்பிக்கை வைத்த இயக்குநரை பாராட்ட வேண்டும். எத்தனையோ கதைகள் வந்தது. ஆனால் எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. நூறு கோடி, ஆயிரம் கோடி கொடுத்தாலும் தாறுமாறான படங்களில் நடிக்கும் அளவுக்கு தரம் கெட்டவன் கிடையாது. எம்.ஜி.ஆர் வழியில் வந்தவன். தியேட்டரில் வேலை பார்த்த போது அவரின் படங்களையும் கருத்துகளையும் பார்த்து வளர்ந்தவன்.

இந்தப் படத்தின் கதை திரைக்கதை கேட்டதும் பிடித்தது. முதல் படம் போல் பயந்து பயந்து நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் இன்டர்வெல் மாதிரி ஒரு இன்டர்வெல் காட்சியைக் கேட்டதே இல்லை. படம் பார்க்கும் போது யாராலும் கணிக்க முடியாது. நடிக்க வந்து வெற்றிப் படங்கள் கொடுத்த போது 50 படங்கள் சோலோ ஹீரோவாக நடித்து பிறகு படங்கள் இயக்க மட்டும் செய்ய வேண்டும் என நினைத்தேன். ஆனால் 2010ல் ஒரு விபத்து நடந்தது. பின்பு 50 படம் என்பது 45 படங்கள் என மாற்றிக் கொண்டேன். மேதை படம் 44வது படம். இன்னொரு படம் வேண்டுமே எனத் தேடிய போது தான் 'சாமானியன்' கதை வந்தது. நடிக்க வந்து 44 வருடங்கள் ஆகிறது. சீக்கிரம் 45 வருடங்கள் ஆகிவிடும். 45 வருடங்கள் 45 படங்கள். இந்தப் படத்தையும் என் ரசிகர்களும் மக்களும் வெற்றி பெற செய்வார்கள் என நம்புகிறேன்" என்றார்.