வாய்ப்பு கிடைக்கும் போது அதனை சரியாக பயன்படுத்த வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள '2.0' திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் முதல்கட்டமாக 2 பாடல்கள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், " ஷங்கர் இந்தப் படத்திற்காக நான் மிகவும் கஷ்டப்பட்டதாக சொன்னார். ஆனால், ஒரு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். அப்படி கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்தாமல் விட்டால் நம்மை விட முட்டாள் இருக்க முடியாது. ஒருவர் பெயர், புகழுடன் இருக்கிறார் என்றால் அது திறமை, கடின உழைப்பால் மட்டுமல்ல. அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளால் தான். அப்படியான வாய்ப்புகள் சிலருக்கு
தானாக வரும். இல்லையென்றால் நாம் தான் அதனை உருவாக்க வேண்டும். அது மற்றவர்களுடைய வயிற்றில் அடிக்காமல் நியாயமானதாக, நேர்மையானதாக இருக்க வேண்டும். பல இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கும் துபாய் அரசுக்கும், அரசருக்கும் நன்றி. எனக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் ஒரு பந்தமிருக்கிறது. நான் பஸ் கண்டக்டராக இருந்தபோதிலிருந்து அந்த பந்தம் தொடர்கிறது. 2.0 பட வாய்ப்பைக் கொடுத்த ஷங்கர்,
தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோருக்கு நன்றி" என்று ரஜினிகாந்த் பேசினார்.