சினிமா

“இன்று ரொம்ப சோகமான நாள்” - எஸ்பிபி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

“இன்று ரொம்ப சோகமான நாள்” - எஸ்பிபி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

webteam

பாடகர் எஸ்பிபி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், “இன்று ரொம்ப சோகமான நாள். கடைசி நிமிடம் வரைக்கும் உயிருக்காக போராடிய எஸ்பிபி நம்மை விட்டு பிரிந்து விட்டார். அவரின் மறைவு மிகுந்த வேதனையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. எஸ்பிபியின் பாட்டுக்கும், குரலுக்கும் ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவிலேயே இருக்க மாட்டார்கள். எஸ்பிபியின் பாட்டை விட குரலை விட அவரை அதிகம் நேசித்தவர்கள் அதிகம். அதற்கு காரணம் அவரின் மனித நேயம்.

சிறியவர்கள், பெரியவர்கள் என்று பாராமல் அனைவரையும் மதித்தார். இந்தியாவின் பல மொழிகளில் பாடும் சிறப்பு எஸ்பிபிக்கு உண்டு. அவரின் இனிமையான, கம்பீரமான குரல் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும். அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

எஸ்பிபி மறைவு குறித்து நடிகர் சிவக்குமார் “அரை நூற்றாண்டுக்கும் மேலாக
எத்தனை ஆயிரம் பாடல்களை
எத்தனை மொழிகளில் பாடிய
உன்னதக்கலைஞன் !
மூச்சுக்காற்று முழுவதையும்
பாடல் ஓசையாக மாற்றியவன் !
இமயத்தின் உச்சம் தொட்டும்
பணிவின் வடிவமாக
பண்பின் சிகரமாக
இறுதி உரையிலும்
வெளிப்படுத்தியவன்...
இதுவரை மக்களுக்கு
பாடியது போதும்
இனி என்னிடம் பாட வா
என்று இறைவன்
அழைத்துக் கொண்டான்!
போய் வா தம்பி” எனத் தெரிவித்துள்ளார்.

எஸ்பிபி மறைவு குறித்து நடிகர் மோகன்லால் தனது டிவிட்டர் பக்கத்தில், “இசை உலகிற்கு ஒரு உண்மையான இழப்பு. இதயம் நொறுங்கியது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.