நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 169ஆவது படமாக உருவாகியுள்ளது ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் மோகன்லால், ஷிவ் ராஜ்குமார், ஜாக்கி ஜெராஃப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குறிப்பாக, ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணி முதல்முறையாக இணைந்துள்ள 'ஜெயிலர்' திரைப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியது. இதைத் தொடர்ந்து இப்படம், உலகம் முழுவதும் கடந்த 10ஆம் தேதி வெளியானது.
இப்படி மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன ’ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில், இதர மொழி நடிகர் பட்டாளமும் நடித்திருப்பதால் கூடுதலாக வசூலையும் அள்ளி வருகிறது. மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் கர்நாடக நடிகர் ஷிவ் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் ’ஜெயிலர்’ படத்தில் நடித்திருப்பதால், தமிழ்நாட்டைத் தாண்டியும் இப்படம், பிற மாநிலங்களிலும் வசூலைக் குவித்து வருகிறது.
குறிப்பாக, பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பி வருகிறது. முதல் நாளிலேயே உலக அளவில் ரூ.100 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்த ’ஜெயிலர்’, இரண்டாம் நாளில் ரூ.150 கோடி வசூலைக் கடந்தது. தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஜெயிலர் திரைப்படம் சக்கைப்போடு போட்டு வருகிறது.
இதையும் படிக்க: அமெரிக்கா| பிறந்து 7 வாரமே ஆன குழந்தை... பசியால் அழுதபோது மதுவை ஊற்றிக்கொடுத்த தாய்!
’ஜெயிலர்’ படம் வெளியான மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ 200 கோடி கிளப்பில் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் படம் முதல் நாளில் ரூ.95.78 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.56.24 கோடியும், மூன்றாவது நாளில் ரூ.68.51 கோடியும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம், படத்தின் மொத்த வசூல் உலகம் முழுவதும் ரூ 220.53 கோடியை எட்டியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அதேநேரத்தில், இந்தியாவில், முதல் வார இறுதியில் ரூ.120 - ரூ.150 கோடியைத் தாண்டியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்திய அளவில் ’ஜெயிலர்’ வெளியான முதல் நாளில் (வியாழன்) ரூ.48.35 கோடியும், இரண்டாம் நாளில் (வெள்ளி) ரூ.25.75 கோடியும், 3வது நாளில் (சனி) ரூ.33.75 கோடியும் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று 4வது நாள் மற்றும் விடுமுறை நாளான ஞாயிறுக்கிழமையில் ’ஜெயிலர்’ பட வசூல் இன்னும் கூடுதலாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. 15ஆம் தேதி சுதந்திர தினமும் விடுமுறை நாளாக வருவதால் ’ஜெயிலர்’ படம் மேலும் பல கோடிகளை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாஸ் வசூல் வேட்டை நடத்திய ’விக்ரம்’ திரைப்படத்தின் வசூலை ஜெயிலர் முறியடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவே பலரும் கூறுகின்றனர். விக்ரம் படம் சுமார் 450 கோடி ரூபாய் வரை வசூலித்தது. மூன்றுநாட்களில் 200 கோடியை ஜெயிலர் படம் தாண்டியுள்ள நிலையில் ஞாயிறு(இன்று), திங்கள், செவ்வாய் என அடுத்த மூன்று நாட்களில் வசூல் குறையாமல் இருந்தால் நிச்சயம் 400 கோடியை எட்டிவிடும்.
ஏனெனில் செவ்வாய்க்கிழமை சுதந்திர தினம் என்பதால் அன்றும் கூட்டம் அலைமோத வாய்ப்புள்ளது. இப்படியே சென்றால் பாக்ஸ் ஆபீஸ் வசூல் கண்டிப்பாக ’விக்ரம்’ படச் சாதனையை தாண்டிவிடும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: கொலம்பியா| பல் பிடுங்கியதால் ரத்தக்கசிவு... சிறுமிக்கு நேர்ந்த துயரம்!