செய்தியாளர் :முருகேசன்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டடப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக, ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கவுள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் திரைப்பட மற்றும் நாடக நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். பொதுக்குழு கூட்டத்தில், பல்வேறு விஷயங்களில் முதல்வர் ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து, 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் இதுவரை நடைபெற்ற கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு, ஒப்புதல் அளித்து தீர்மானம் இயற்றப்பட்டது. அதேபோல், நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை அடுத்தாண்டு மார்ச் 3 ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
நிர்வாகிகள் தேர்தலுக்காக பணத்தை வீணாக்காமல், அதனை நடிகர் சங்க கட்டடத்திற்கு பயன்படுத்தும் வகையில் பதவி நீட்டிப்பு தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக, தற்போது பதவியிலிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில், நடிகர் டெல்லி கணேஷ், நடிகை சி.ஆர். விஜயகுமாரி இருவருக்கும், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பொதுக்குழுவில் பேசிய சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, நடிகர் சங்க கட்டிடத்திற்காக 25 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தக் கடனுக்காக வங்கியில் 11 கோடியே 50 லட்ச ரூபாய் வைப்பு தொகை வைக்கப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், உதயநிதி ஸ்டாலின், விஜய், தனுஷ் ஆகியோர் தலா 1 கோடி ரூபாய் அளித்தாகக் குறிப்பிட்டார். உதயநிதி ஸ்டாலின் மூலம் 6 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்தாகவும், நெப்போலியன் 1 கோடி ரூபாய் கடனாக அளித்தாகவும் கார்த்தி தெரிவித்தார். தொடர்ந்து நடிகர் சங்க நிர்வாகிகள், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய கார்த்தி, ”அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் நடிகர் சங்கக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை முடிக்கப்படும். நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்படும் நாடகத்தில், ரஜினி - கமல் இணைந்து நடிக்கவுள்ளார்கள்.” என்று தெரிவித்துள்ளார். நடிகர் சங்க கட்டட பணிகள் பல ஆண்டுகளாக நீண்டு கொண்டிருக்கிறது. வரும் மார்ச் மாதத்திற்குள்ளாவது கட்டடப் பணிகள் திட்டமிட்டப்படி முடியுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.