சினிமா

“இளையராஜா நிகழ்ச்சியை தடுக்கவே இந்தப் போராட்டம்” - விஷால் புகார்

“இளையராஜா நிகழ்ச்சியை தடுக்கவே இந்தப் போராட்டம்” - விஷால் புகார்

rajakannan

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் நடத்தப்பட உள்ள இளையராஜா நிகழ்ச்சியை தடுக்க வேண்டும் என்ற நோக்கில்தான் சிலர் போராட்டம் நடத்தியுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். 

தமிழ்த் திரைப்பட ‌தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கும், அவரது எதிர் தரப்பினருக்கும் இடை‌‌யிலான மோதல் முற்றியுள்ள‌‌து. தயாரிப்பாளர் சங்கத்தை மீட்டுத்தருமாறு முதலமைச்சரை சந்தித்து முறையிட இருப்பதாக விஷாலை எதிர்க்கும் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.‌

தயாரிப்பாளர் சங்கத்தில் 7 கோடி ரூபாய் வைப்புநிதி கையாடல் செய்யப்பட்டிருக்கிறது என்று அச்சங்கத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் குற்றச்சாட்டியுள்ளனர். மேலும் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவின் ஒப்புதல் பெறாமல் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது தொடர்பாக அச்சங்கத்தில் உள்ள ஏ.எல்.அழகப்பன், T.சிவா, ஜே.கே. ரித்தீஷ், எஸ்.வி. சேகர், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகங்களுக்கு பூட்டு போட்டனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக புதியதலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக பேசிய நடிகர் விஷால், இந்தப் போராட்டத்‌தில் சக்சேனா போன்ற உறுப்பினர் அல்லாதவர்களை அழைத்து வந்துள்ளதாகவும், திட்டமிட்டப்படி இளையராஜாவின் நிகழ்ச்சியை நடத்தப் போவதாகவும் தெரிவித்தார். 

மேலும் அந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் நிதியில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு நிலம் ‌வழங்கப்படும் என்பதால், இதனைத் தடுக்கும் நோக்கில் சிலர் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் தயாரிப்பாளர் சங்கத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை எனவும், அனைத்து கணக்கு வழக்குகளும் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் விஷால் உறுதியளித்தார்.