சினிமா

“அம்மா”வில் இருந்து விலகிய கேரள நடிகைகளுக்கு நடிகர் பிருத்விராஜ் ஆதரவு

“அம்மா”வில் இருந்து விலகிய கேரள நடிகைகளுக்கு நடிகர் பிருத்விராஜ் ஆதரவு

webteam

மலையாள நடிகம் சங்கமான ‘அம்மா’வில் இருந்து விலகிய நடிகைகள் புதிதாக தொடங்கியுள்ள அமைப்புக்கு நடிகர் பிருத்விராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். 

மலையாள நடிகர் சங்கம் ‘அம்மா’ (Association of Malayalam Movie Artists) . இதன் தலைவராக கடந்த 18 வருடமாக நடிகர் இன்னசென்ட் இருந்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக, நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து அவர் விலகியதை அடுத்து, புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க, நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் கொச்சியில் நடந்தது. இதில், புதிய தலைவராக மோகன்லால் தேர்தெடுக்கப்பட்டார். இவர் பதிவியேற்ற பின்னர், ‘அம்மா’வில் இருந்து பாலியல் குற்றச்சாட்டிற்காக நீக்கப்பட்ட நடிகர் திலீப் சேர்க்கப்பட்டார். எனவே பாதிக்கப்பட்ட  நடிகை அந்த அமைப்பிலிருந்து உடனடியாக விலகினார். 

நடிகர் திலீப் சேர்க்கப்பட்டதற்கு பல நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இன்றுவரை ‘அம்மா’விலிருந்து திலீப் நீக்கப்படாததால், பாதிக்கப்பட்ட நடிகைகளின் மூன்று தோழிகள் உட்பட பல முன்னணி நடிகைகளும் ‘அம்மா’வில் அமைப்பிலிருந்து விலகியுள்ளனர். ‘அம்மா’ பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாமல் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது என்பதே விலகியவர்களின் குற்றச்சாட்டு ஆகும். இந்நிலையில் ‘அம்மா’விலிருந்து விலகிய நடிகைகளுக்காக சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகியது. இந்தச் சூழலில் விலகிய நடிகைகள் இணைந்து பெண்கள் இணைந்த சினிமா (WCC) என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ளனர். இதில் அம்மாவில் இருந்து விலகிய நடிகைகளான ரேவதி, பத்மபிரியா, பார்வதி ஆகியோர் இணைந்து திலீப் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

இவர்களின் அமைப்புக்கு பத்திரிகையாளர்கள், இயக்குநர்கள், நடிகைகள் மற்றும் நடிகர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் பிருத்விராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “ரம்யா, கீது மற்றும் ரிமா ஆகியோர் ஏன்? ‘அம்மா’வில் இருந்து விலகினார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களது தைரியத்திற்கும், துணிச்சலான முடிவிற்கும் நான் தலைவணங்குகிறேன். சில பேர் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை வைக்கலாம், ஆனால் எனக்கு தெரியும் அவர்கள் செய்வது சரியா? தவறா? என்பது. அதனால்தான் நான் அவர்களுடன் நிற்கின்றேன்.” என்று கூறியுள்ளார்.