சினிமா

மனிதம் மரித்து போய்விட்டதா?: நடிகர் பிரசன்னா ஆதங்கம்

மனிதம் மரித்து போய்விட்டதா?: நடிகர் பிரசன்னா ஆதங்கம்

rajakannan

விழுப்புரம் அருகே 14வயதுச் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேசப்படாதது ஏன்? என்று நடிகர் பிரசன்னா கேள்வி எழுப்பியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராயி(45). கணவன் இறந்த நிலையில் 4 மகன்கள், 2 மகள்களுடன் ஆராயி வாழ்ந்து வருகிறார். ஆராயி தனது கடைசி மகன் தமயன், மகள் தனம் ஆகியோருடன் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரயாத நபர்கள் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து 3 பேரையும் பயங்கர ஆயுதங்களால் சராமாரியாக தாக்கினர். இந்தத் தாக்குதலில் சிறுவன் தமயன் சம்பவ இடத்திலேயே இறந்தான். இதில் சிறுமி தனம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து அதிகம் பேசப்படாதது ஏன் என்று நடிகர் பிரசன்னா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த அவரின் ட்விட்டர் பதிவில், “விழுப்புரத்தில் ஆராயி மற்றும் அவரின் 8 வயது மகன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒரு பிரபலத்தின் மரணத்தால் மட்டுமே அதிகம் பேசப்படாமல் இருக்கிறதா அல்லது வேறு காரணமா?” என்று  வினவியுள்ளார். மேலும் கேரளாவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மதுவை கொன்ற கும்பல் கைது செய்ததைப் போல் இங்கும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கோரிக்கை விடுத்துள்ளார்.