சினிமா

போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பிரபுதேவா - ‘முசாசி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட பிரபலம்

போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பிரபுதேவா - ‘முசாசி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட பிரபலம்

சங்கீதா

பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘முசாசி’ என பெயரிட்டு, அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘முசாசி’. ஆக்சன் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். சவாலான துணை போலீஸ் கமிஷனராக பிரபுதேவா நடித்து வரும் இந்தப்படத்தில் கதாநாயகி யாரும் இல்லை. ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், உதயபானு மகேஸ்வரன், ‘மாஸ்டர்’ மகேந்திரன், தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இதில் ‘மாஸ்டர்’ மகேந்திரன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விக்னேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்துக்கு எஸ்.என். பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் ஜான் பிரிட்டோ பெரும் பொருட்செவில் தயாரிக்கிறார். இந்தப்படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னை மற்றும் கொடைக்கானல் - கேரளா எல்லைப் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் படம் குறித்து இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் கூறுகையில், “இது ஒரு யதார்த்தமான போலீஸ் கதை. அதனால் இந்தப் படத்தில் காதல் காட்சிகளும், கதாநாயகியும் இல்லை. ‘பகீரா’ படத்தில் ஏழு கதாநாயகிகளுடன் பிரபுதேவா நடிப்பதாகச் செய்திகள் வந்த நிலையில், இந்தப் படத்திற்காக நான் அவரைச் சந்திக்க சென்றபோது என் கதையில் கதாநாயகிகள் இல்லையென்பதால், மிகவும் கவலையடைந்தேன்.

ஆனால் இந்தப் படத்தின் கதையைக் கேட்ட பிரபுதேவா, கதாநாயகிகள் இருந்தால் கதையின் ஓட்டத்தை சீர்குலைத்துவிடும் என்பதால், எந்தப் பெண் கதாபாத்திரத்தையும் சேர்க்க வேண்டாம் என்று கூறியது மகிழ்ச்சியை தந்தது. முசாசி ஒரு ஜப்பானிய போர்வீரர். வாள்வீச்சுக்கு பெயர் பெற்றவர். இந்தப்படத்தில் பிரபுதேவாவின் கதாபாத்திரமும், பல போராட்டங்களை சந்தித்து, அதில் இருந்து முசாசி போல் வெற்றிகரமாக வெளிவருவதை குறிப்பிடுகிறது. அதனால் இந்தப் படத்திற்கு பொருத்தமான தலைப்பு ‘முசாசி’ தான் என்று நாங்கள் நம்பினோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.