பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். இவர் பல ஆண்டுகளாக தெலுங்கு படங்களில் நடித்து வந்தாலும், பாகுபலி படமே இவரை இந்தியா முழுவதும் அறிய செய்தது. இந்தப் படத்துக்கு பின்பு மீண்டும் மிகப் பெரிய பொருட் செலவில் தயாரிக்கப்படும் "சாஹோ" படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்தாண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியிடப்படவுள்ளது.
இப்போது பிரபாஸ்க்கு ஒரு புதிய சிக்கல் வந்துள்ளது. நடிகர் பிரபாஸ், தெலுங்கானா மாநிலத்தில் ராயதுர்கம் பகுதியில் வீடு ஒன்றை கட்டியுள்ளார். மிகப் பிரம்மாண்டாக 84 ஏக்கரில் ஆடம்பர சொகுசு வீடு அது. ஆனால், அந்த வீடு அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதன் காரணமாக இடம் யாருக்கு சொந்தம் என்ற ரீதியில் வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றது.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த பிரபாஸ் "இந்த இடத்தை 2005 ஆம் ஆண்டு வாங்கினேன். இந்த இடத்தை முறைப்படுத்துவதற்கான கட்டணத்தையும் அரசுக்கு செலுத்திவிட்டேன். ஆனால், எனக்கு முன் அறிவிப்பு கொடுக்காமல், வீட்டை ஜப்தி செய்ய திட்டமிட்டுள்ளனர் " என மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த ஐதராபாத் உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் தெலுங்கானா அரசு டிசம்பர் 24 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மறு உத்தரவு வரும் வரை பிரபாஸின் வீடு தொடர்பான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்,