பிரபல குணச்சித்திர நடிகர் பாண்டு மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கிறது.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக இதுகுறித்து வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில் "நடிகர் பாண்டு அவர்கள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் மரணம் அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது. கோவிட் பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை பாண்டு மரணமடைந்தார்.
கரையெல்லாம் செம்பக பூ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நகைச்சுவை நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் புகழ் பெற்றார். சிரித்து வாழ வேண்டும், கடல் மீன்கள், பணக்காரன், நடிகன், நாளைய தீர்ப்பு, ராவணன், முத்து, உள்ளத்தை அள்ளித்தா, நாட்டாமை, காதல் கோட்டை, வாலி, கில்லி, சிங்கம், காஞ்சனா2 போன்ற பல ஹிட் படங்கள் உட்பட 230க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். டி.வி. சீரியலிலும் நடித்துள்ளார்.
பாண்டு சிறந்த ஓவியராகவும் தன் திறமைகளை வெளிப்படுத்திய கலைஞர் ஆவார். எழுத்துக்கள் வடிவமைக்கும் டிசைனராக கேபிட்டல் லெட்டர்ஸ் என்ற கம்பெனி மூலம் உலகம் முழுக்க அறிய பட்டவராக இருக்கிறார். இவர் டிசைன் செய்த அதிமுக கொடியும், லோகோவும் தான் எம்ஜிஆர் அவர்கள் தேர்ந்தெடுத்தார். இவரது மனைவியும் ஓவியர் தான். இவரது எதிர்பாராத மறைவு நடிகர் சமூகத்துக்கு மாபெரும் இழப்பாகும். அன்னாரது மறைவால் துயரத்தில் வாடும் குடும்பத்தாரின் துக்கத்தில் நடிகர் நடிகைகள் சமூகம் சார்பாக நாங்களும் பங்கு கொண்டு அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.